Friday, August 14, 2015

நெல் வயல்களில் எலித் தொல்லை:தடுக்க விவசாயத்துறை ஆலோசனை


கம்பம்:நெல் வயல்களில் எலித் தொல்லை அதிகரித்துள்ளது. எலிகளை வயல்களில் வராவிடாமல் தடுப்பது மற்றும் எலிகளை தடுக்கும் முறைகள் பற்றி விவசாயத்துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

கம்பம் உதவி இயக்குனர் அசோகன் கூறியதாவது: நெல் வயல்களில் எலிகள் இருந்தால், இளம் நாற்றுக்கள் துண்டு துண்டாய் வெட்டப்பட்டு காணப்படும். பயிர் முதிர்ச்சி நிலையில் கதிர்கள் கத்தரிக்கப்பட்டு பொந்துகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். வயல்களில் எலித்தொல்லையில் இருந்து விடுபட வரப்புகளை குறுகலாக அமைக்கவேண்டும். ஆட்டுக்கிடை அமைத்தால் எலிகள் வராது. நொச்சி மற்றும் எருக்கலை செடிகளை வயலை சுற்றி வேலிப்பயிராக நட்டால் எலிகள் ஓடிவிடும். சணப்பு பூவை சிறிய துண்டுகளாக்கி வயல்களில் ஆங்காங்கே போட்டால், அதிலிருந்து கிளம்பும் வாடையால் எலிகள் ஓடிவிடும். பசுஞ் சாணத்தை வரப்புகளில் போட்டாலும் எலிகள் இருக்காது.

நடவு செய்த 3 முதல் 4 வாரங்களுக்குள் நச்சு உணவு பொறியாக ஜிங்க் சல்பேட் அல்லது புரோமோடையலோன் வைக்க வேண்டும். இது தவிர தஞ்சாவூர் பொறிகள் அல்லது மூங்கில் பொறிகள் ஒரு எக்டருக்கு 100 எண்ணம் வைக்கலாம். அலுமினியம் பாஸ்பேட் ஒரு பொந்துக்கு இரண்டு மாத்திரை வீதம் வைத்து எலி நுழையும் வாயிலை நன்றாக சேற்றால் மூடி விட வேண்டும்.

வார்பரின் 0.5 சதவீதம் உள்ள ஒரு பகுதியை 19 பகுதிகளான பொறிக்கப்பட்ட சோளம், அரிசி, கருவாடு ஆகியற்றுடன் கலந்து எலி நடமாடும் இடங்களில் வைக்கவேண்டும். ஆந்தை மற்றும் பிற பறவைகள் அமர்வதற்கு எக்டருக்கு 40 முதல் 50 குச்சிகள் நட்டு வைக்கவேண்டும். அந்த குச்சிகளில் பனை ஓலைகளை கட்டி விட வேண்டும். காற்று அடிக்கும் போது அந்த ஓலைகளில் இருந்து கிளம்பும் ஒலியை கேட்டு எலிகள் ஓடி விடும். மேலும் விபரங்களுக்கு கம்பம் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Source :Dinamalar

No comments:

Post a Comment