Wednesday, March 9, 2016

நெல்லில் புகையான், குலைநோய் தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண் அதிகாரி விளக்கம்


நெற்பயிர்களை தாக்கும் புகையான், குலைநோய் தாக்குதலை சரியான கலவையில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அதிக அளவில் நெல் பயிர்
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகும். கடந்த ஆண்டு போதுமான அளவில் பருவமழை பெய்ததால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. இதனையடுத்து விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழையும் இடமான கண்ணமங்கலத்திலிருந்து போளூர் வரையும், பின்னர் போளூரிலிருந்து திருவண்ணாமலை வரையும் சாலையின் இருபுறமும் உள்ள வயல் வெளிகளில் நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை கம்பளம் போர்த்தியதுபோல் தற்போது பசுமையாக காட்சியளிக்கிறது.
தற்போது நெல்பயிர்கள் பால் பிடித்து கதிர்வரும் தருவாயில் உள்ளது. 3 ஆண்டுகளாக போதிய மழையின்றி பயிர் செய்யாமல் இருந்த விவசாயிகள் இப்போதுள்ள தண்ணீரை பயன்படுத்தி நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். பசுமையாக நெற்பயிர்கள் வளர்ந்த நிலையில் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இப்போது பல வயல்களில் நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் நோய் தாக்குதல் தென்படுவதால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் விளைச்சல் குறைந்து விடுமோ என விவசாயிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
தடுப்பது எப்படி?
இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்த சரியான கலவையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் கண்ணகி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
நெற்பயிரில் புகையான் நோய் மற்றும் குலைநோய் தாக்குதலுக்கு முக்கிய காரணம் விவசாயிகள் நெய்பயிருக்கு அதிக அளவிற்கு யூரியாவை இடுவதால் தான் ஏற்படுகிறது. குலைநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிரை பாதுகாக்க ஒரு ஏக்கருக்கு ‘டிரைசைகிளோசோல்’ அல்லது கார்பென்டசிம் மருந்தை 500 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
புகையான் நோயை தடுக்க ஒரு ஏக்கருக்கு ‘போஸலோன்ஸ 35 இசி’ என்ற மருந்தை 1,500 மில்லி, அல்லது ‘குளோர்பைரிபாஸ் 20 இசி’ என்ற மருந்தை 1, 250 மிலி அல்லது ‘பாஸ்பாமிடான்’ 875 மில்லி ‘டிரையசோபாஸ் இசி 625’ என்ற மருந்தை 1250 மிலி என இவற்றில் ஏதாவது ஒன்றினை தெளித்து நெற்பயிர்களுக்கு அடிக்கலாம். இதன் மூலம் புகையான் நோயை கட்டுப்படுத்தலாம் என்றார்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment