திருவாரூர் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெல் தரிசு பருத்தி பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டில் நெல் தரிசில் சாகுபடி செய்துள்ள பருத்திப் பயிரை தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு செய்ய கடன் பெற்ற விவசாயிகள் 31.3.2016 தேதி, கடன் பெறாத விவசாயிகள் 15.3.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதன்மூலம் இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில் இழப்பீடு கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் ஆலங்குடி, ஆவூர், வலங்கைமான், திருக்கண்ணமங்கை, திருவிழிமிழலை, குடவாசல், அகரத்திருமாளம், நன்னிலம், பேரளம், கோட்டூர், பாலையூர், தலையாமங்கலம், மன்னார்குடி, குளிக்கரை, வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், வடுவூர், நீடாமங்கலம் பிர்க்காவில் பயிர் செய்துள்ள நெல் தரிசு பருத்திப் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெற்ற பெரிய, சிறு மற்றும் குறு விவசாயிகளும் கடன் பெறாத பெரிய விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ. 4,149-க்கு இன்சூரன்ஸ் செய்ய, அரசு வழங்கும் 50 சதவீத மானியத் தொகை நீங்கலாக பிரிமியத் தொகை ரூ. 187 செலுத்த வேண்டும்.
கடன் பெறாத சிறு குறு விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ. 4,149 இன்சூரன்ஸ் செய்ய, அரசு வழங்கும் 55 சதவீத மானியத் தொகை நீங்கலாக பிரிமியத் தொகை ரூ. 168 செலுத்த வேண்டும்.
கூடுதலாக ஏக்கருக்கு ரூ. 6,223-க்கு இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், கூடுதல் பிரிமியமாக ரூ. 560 தங்கள் விருப்பத்தின் பேரில் செலுத்தலாம். பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் சிட்டா, அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று முன்மொழிவு படிவத்துடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது சேவைப் பகுதி வணிக வங்கிகளிலோ தங்களின் பிரிமியத் தொகையை செலுத்தலாம்.
முன்மொழிவு படிவங்களை அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது வணிக வங்கிகளிலோ பெற்றுக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
Source : Dinamani
No comments:
Post a Comment