பயறு வகைப் பயிர்களில் உயர் விளைச்சல் பெறுவதற்கான சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் திருராமேஸ்வரம் கிராமத்தில் விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
பயறு வகைப் பயிர்களின் தொகுப்பு முதல்நிலை செயல் விளக்கத் திடல் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி நடைபெற்றது. நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ.பாஸ்கரன் தலைமை வகித்து, பயறு வகைப் பயிர்களின் முக்கியத்துவம் குறித்தும், அவற்றின் மகசூலை அதிகரிக்க களை, உர மற்றும் நீர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
மன்னார்குடி வேளாண்மை உதவி இயக்குநர் உத்திராபதி முன்னிலை வகித்து, வேளாண் துறையின் திட்டங்கள் பற்றி விளக்கிக் கூறினார். திருராமேஸ்வரம் ஊராட்சித் தலைவர் மாரியப்பன் இப்பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் அ.காமராஜ், "பயறு அதிசியம்' தெளித்தலின் முக்கியத்துவம் குறித்தும், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா.ரமேஷ் பயறுவகைப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மேலும், பயறுவகைப் பயிர்களின் மகசூலை அதிகரிக்க "பயறு அதிசியம்' என்ற ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கொண்ட பூஸ்டரை பூக்கள் பூக்கத் தொடங்கும் தருணத்தில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கும் முறைகள் பற்றி செயல் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில், வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர்கள் முனைவர் வெ.சிவகுமார், மருத்துவர் செ.சரவணன், வேளாண்மை அலுவலர் விஜயகுமார், வேளாண்மை உதவி அலுவலர் திருச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், 30 விவசாயிகள் பங்கேற்று, பயிற்சி பெற்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment