தமிழகத்தில் பருத்தியின் விலை நிலையாக இருக்கும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 2014-15 ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தியில் உலக அளவில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.அதேபோல், உலக பருத்தி உற்பத்தியில் அடுத்த பருவத்திலும் இந்தியா 27 சதவீத பங்களிப்பை வழங்கி, தனது நிலையை தக்கவைத்துக் கொள்ளும் என்று அமெரிக்க வேளாண் துறை கணித்துள்ளது.
இந்தியாவைத் தவிர பருத்தி உற்பத்தி செய்யும் பிற முக்கிய நாடுகளில் உற்பத்தியானது முந்தைய பருவத்தைவிட குறையும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமும், இந்திய பருத்தி உற்பத்தி 2015-16-ஆம் ஆண்டில் 5.7 சதவீதமாக குறையும் என்று பருத்திக் கழகமும் மதிப்பிட்டுள்ளன.
2014-15-ஆம் ஆண்டில் 3.82 கோடி பேல்களாக இருந்த பருத்தி உற்பத்தி 2015-16-ஆம் ஆண்டில் 3.62 கோடி பேல்களாகவே இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, 2015-16-ல் பருத்தி உற்பத்தியும் நுகர்வும் குறையவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் வெள்ளை ஈ தாக்குதலினாலும், குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் போதிய மழை இல்லாததாலும் 2015-16-ஆம் ஆண்டுக்கு கணிக்கப்பட்ட 3.90 கோடி பேல்கள் உற்பத்தியில் 10 முதல் 15 லட்சம் பேல்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.
2014-15-ல் பருத்தி ஏற்றுமதி 70 லட்சம் பேல்களாக இருக்கும் என பருத்தி ஆலோசனை வாரியம் கணித்தது. ஆனால் 55 லட்சம் பேல்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பருத்தி விளைகிறது. மழை, பூச்சி, நோய்த் தாக்குதலால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளது.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பருத்தி சந்தையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட தரமான, நீண்ட இழை பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பருத்தி உற்பத்தியும், வரத்தும் குறைவாக இருப்பதாலும், மழைக்கால ஈர இழை தரம் குறைந்து காணப்படுவதாலும், பருத்தி ஏற்றுமதியில் தடை இருப்பதாலும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் பருத்தி விவசாயிகள் பருத்தி விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, கடந்த 9 ஆண்டு மாதாந்திரப் பருத்தி விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை, ஊரக மேம்பாடு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனை தகவல் மையம் ஆராய்ந்து வர்த்தக ஆய்வும் மேற்கொண்டது.
இந்த பொருளாதார ஆய்வு முடிவின்படி, நீண்ட இழை பருத்தியின் பண்ணை விலை ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் குவிண்டாலுக்கு ரூ.5,500 முதல் ரூ.5,800 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு, வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், பருத்தித் துறைத் தலைவர் ஆகியோரை நேரிலோ, 0422 - 2431405, 2456297 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment