ஊட்டி: விவசாயிகள் மத்தியில், தோட்டக்கலை சாகுபடி பயிற்சிகள் வழங்கும் பணியில் வேகம் காட்டப்பட்டு வருகிறது.
நீலகிரியில், தேயிலை விலை பிரச்னை, தோட்டப் பயிர் சாகுபடியில் மண் வளம், மார்க்கெட்டிங் உட்பட பிரச்னைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்ட தோட்டக்கலை உழவர் பயிற்சி நிலையம் சார்பில், தோட்டக்கலை சார்ந்த நிறுவனங்களை ஒருங்கிணைத்து, கிராமங்கள் தோறும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
* ஊட்டி மீக்கேரியில் நடந்த பயிற்சியில், ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாலதி, 'உபாசி' வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சுகுனா, வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரம்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜான்பாஸ்கோ, அஸ்வினி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
தோட்டக்கலை பயிரில் நுண்ணீர் பாசனம் அமைத்தல், கைத்தெளிப்பான் பராமரிப்பு, கேரட் பயிரில் களையெடுத்தல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மீக்கேரி ஊர் தலைவர் ஜோகி, மீக்கேரி சிறு விவசாயிகள் சங்க தலைவர் அரசு, தோட்டக்கலை உதவி வேளாண் அலுவலர் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கோத்தகிரி நெடுகுளாவில் நடந்த பயிற்சியில், தோட்டக்கலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாலதி, சங்கர், வட்டார உதவி இயக்குனர் சித்ராபானு, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரேவதி பயிற்சி வழங்கினர். தேயிலையில் சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பசுந்தேயிலை உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தோட்டக்கலை உதவி வேளாண் அலுவலர் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கேத்தியில் நடந்த பயிற்சியில், உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராம்சுந்தர், தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். கேத்தி ஊர் தலைவர் நஞ்சன், கேத்தி பேருராட்சி துணைத் தலைவர் சுதேவன் ஆகியோர் பேசினர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக தோட்டக்கலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கார்த்திகேயன், நவீன முறை காய்கறி சாகுபடி குறித்து பயிற்சி வழங்கினார். 'உபாசி' வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி சுகுணா, மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை உற்பத்தி குறித்து பயிற்சி வழங்கினார்.
மாவட்ட வேளாண் விற்பனை துறையின் துணை இயக்குனர் வீரமணி, விற்பனை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வேளாண் விற்பனை பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து பேசினார். விவசாயிகள், தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
குன்னுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் உமாராணி, 'அட்மா' திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஷீலா உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டி உழவர் பயிற்சி மைய துணை இயக்குனர் ராம்சுந்தர், தோட்டக்கலை உதவி வேளாண்மை அலுவலர் சம்சுதீன் செய்திருந்தனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment