நெற் பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை செய்வது எப்படி? என்பது குறித்து அரிமளம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் பயிற்சி அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டாரம் நெடுங்குடி கிராமத்தில் வேளாண் துறை சார்பில் பண்ணைப் பள்ளி நடத்தப்பட்டுவருகிறது. இப்பண்ணைப் பள்ளியில் 4ம் வகுப்பு பாடமாக வளர்ச்சிப் பருவத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது, மேலும், நோய்த் தாக்குதலால் ஏற்படும் பொருளாதாரச் சேதம், நுண்ணூட்ட குறைவால் நெற் பயிரில் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் நுண்ணூட்டம் இடுவதன் அவசியம் என நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வளர்ச்சிப் பருவத்தில் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்து அரிமளம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் உதயகுமார் விளக்கமாக எடுத்துரைத்தார். வளர்ச்சிப் பருவத்தில் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உழவியல் முறை, நேரடி அழிப்பு முறை, உயிரியல் முறை ஆகியன குறித்தும், நன்மை, தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும் அப்போது அவர் தெளிவாக எடுத்துக் கூறினார். அத்துடன் விளக்குப் பொறி, இனக் கவர்ச்சிப் பொறி அமைத்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதே போல், வயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டு, ஊசி தட்டான், சிலந்தி ஆகியவற்றை காண்பித்து விளக்கினார். அப்போது அவர், சிலந்திகள் வயல்களில் பெருக்கமடைய சிறிய குச்சிகளைக் கொண்டு பந்தல் அமைக்க வேண்டும் என்றும், பொறி வண்டுகள் பெருகிட வரப்பில் தட்டைப்பயறை பயிரிட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் முகமது ஷாஜஹான், நெற்பயிருக்கு நுண்ணூட்டம் இடுவதன் அவசியம், நுண்ணூட்டப் பற்றாக்குறையால் நெற்பயிரில் தென்படும் அறிகுறிகள் குறித்துப் பேசினார். இதில் நெல் நுண்ணூட்டம் குறித்து செயல் விளக்கம் அளித்தார். குறிப்பாக, ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டம் 20- 30 கிலோ மணலுடன் கலந்து நடவுவயலில் இடும் முறை பற்றி செயல் விளக்கம் அளித்தார். வேளாண் உதவி அலுவலர், வட்டாரத் தொழில்நுட்ப உதவி மேலாளர் விக்னேஷ் ஆகியோர் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால் உண்டாகும் மகசூல் சேதத்தை விளக்கிக் கூறினார். அத்துடன் இதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment