Friday, December 25, 2015

பண்ணைக்குட்டை அமைத்துள்ள விவசாயிகள் மீன்குஞ்சுகளை மானியத்தில் பெற்று பயனடையலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்


சிவகங்கை,
மாவட்டத்தில் தங்களது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்துள்ள விவசாயிகள் 80 சதவீதம் மானியத்தில் மீன்குஞ்சுகள், பழமரக்கன்றுகள், பயிர் வகைகளை பெற்று பயனடையாலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நீர்வடிப்பகுதி திட்டம்
சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குருமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் ஒருங்கிணைந்த நீர் வடிப்பகுதி வேளாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை, இளையான்குடி, காளையார்கோவில், கல்லல், தேவகோட்டை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 7 வட்டாரங்களில் 85 நீர்வடிப்பகுதி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் தீர்மானங்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு தேவையான பணிகள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இந்த திட்டம் மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டைகளில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையினால் மழைநீர் நிரம்பி உள்ளது. இதன் மூலம் பழமரக்கன்றுகள் நடவு செய்யவும், மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு பயிரிடவும் ஏதுவான சூழ்நிலை உள்ளது.
80 சதவீத மானியம்
இதுதவிர கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 80 சதவீதம் மானியத்தில் பண்ணைக் குட்டை அமைத்த விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகள் கொடுக்கப்பட்டன. தற்போது இவைகள் நன்கு வளர்ந்து நல்ல விலைக்கு விற்கும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே சிவகங்கை மாவட்டத்தில் பட்டா நிலங்களில் பண்ணை குட்டை அமைத்துள்ள விவசாயிகள் மீண்டும் மீன்குஞ்சுகள் பெற்று மீன் வளர்க்கவும், மா, கொய்யா போன்ற பழமரக்கன்றுகள், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு ஆகிய பயிர்களையும் 80 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம்.
இதுகுறித்து மேலும் தகவலுக்கு அந்தந்த நீர்வடிப்பகுதி குழுத் தலைவர் அல்லது வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment