Friday, December 25, 2015

மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல் பெற ஆலோசனை


மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான  தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
 பல்லடம், பொங்கலூர், சுல்தான்பேட்டை வட்டாரங்களில் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். இதில், அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து பல்லடம் வேளாண்மை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
 மக்காசோளத்தில் கோ- 1, கோ.எச். 5 (எம்) முதலிய ரகங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் வழங்கும் வீரிய ஒட்டு ரகங்களும் நல்ல மகசூல் தருகின்றன. வீரிய ஒட்டு ரக விதைகளை ஏக்கருக்கு 6 கிலோ வீதமும், பிற ரகங்களை ஏக்கருக்கு 8 கிலோவும் பயன்படுத்தலாம். விதை மூலம் பரவும் அடிச்சாம்பல் நோயை தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது திரம் பூஞ்சாணக்கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து, பிறகு விதைக்க வேண்டும்.
 மக்காச்சோளத்தில் துத்தநாக சத்து, மெக்னீசிய சத்து மற்றும் இரும்புச்சத்து குறைபாடு அதிகளவில் காணப்படும். இதனால் மகசூல் பாதிக்கப்படும். இதை தவிர்க்க வேளாண்மை துறை மூலம் விற்கப்படும் சிறுதானிய நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் 15 கிலோ மணலுடன் கலந்து பார்களின் மேல்பகுதியில் விதைப்புக்கு பிறகு சீராக இட வேண்டும். ஒரு செடிக்கும் மற்றொறு செடிக்கும் 20 செ.மீ. இடைவெளியும், பார்களுக்கு இடையே 60 செ.மீ. இடைவெளியும் இருக்க வேண்டும்.
 மண் பரிசோதனையின் அடிப்படையில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில் பொதுப் பரிந்துரையின்படி ஏக்கருக்கு, தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 54:25:20 கிலோ என்ற விகிதத்தில் இட வேண்டும். இத்தகைய தொழில்நுட்பம் மூலம் ஏக்கருக்கு 4 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெறலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment