திருநெல்வேலி மாவட்டத்துக்கான பயிர்ப் பாதுகாப்புக் குழுவினர், நெல் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்த வாசுதேவநல்லூர் வட்டார விவசாயிகள், தங்களது பகுதிகளில் நெல் பயிரில் நோய் தாக்குதல் அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்டனர். இதையடுத்து, மாவட்ட பயிர்ப் பாதுகாப்புக் குழுவினரை அந்தப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்த ஆட்சியர் மு. கருணாகரன் உத்தரவிட்டார். இதன்படி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இல. பெருமாள் தலைமையில், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆறுமுகச்சாமி, பூச்சியியல் பேராசிரியர் அரிவளம் காத்தபிள்ளை, பயிர் நோயியல் பேராசிரிர்கள் ரஜினி மாலா ஆகியோரடங்கிய பயிர்ப் பாதுகாப்புக் குழுவினர், வாசுதேவநல்லூர் வட்டாரத்துக்குள்பட்ட பகுதி வயல்களில் புதன், வியாழக்கிழமைகளில் நேரடி ஆய்வு செய்தனர். விஸ்வநாதபேரி, முத்தூர்குளப்பரவு பகுதிகளில் நெல் பயிர்களுக்கு கழுத்துக் குலைநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விவசாயிகளுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வயலிலேயே களப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நோய் தாக்கிய பயிர்களின் கழுத்துப் பகுதியில் சாம்பல் நிற புள்ளிகள் தென்படும். இதனால், தானியம் உருவாவது குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும். இந்த நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த வயல்கள் மற்றும் வரப்புகளில் களைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குலை நோய் தென்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்க வேண்டும். நோய் தாக்கிய வயல்களில் டிரைசைக்கிளோசோல் 75 சதம் மற்றும் நனையும் தூள் 120 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இல்லையெனில் அசோக்சிஸ்டோராபின் 200 மி.லி. மற்றும் ஒரு மில்லி ஒட்டும் திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். முதன்முறை மருந்து தெளித்த பின்னர் 15 நாள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உழவியல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது, வாசுதேவநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன், வேளாண் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் வயல்வெளிகளைப் பார்வையிடும் பாதுகாப்புக் குழுவினர் விவசாயிகளுக்கு போதிய ஆலோசனைகளையும், தடுப்பு முறைகளையும் கற்றுத்தருவர் என வேளாண்மை இணை இயக்குநர் இல. பெருமாள் தெரிவித்தார்.
Source : dinamani
No comments:
Post a Comment