வேளாண்மைத் துறை மற்றும் அறிவியல் தொடர்பான பாடங்களில் பட்டம் முடித்தவர்களுக்கு மட்டுமே பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை மையம் நடத்த உரிமம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) ஏ.ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது: பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை மையம் நடத்துவோர், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையகம் தொடங்குபவர் வேளாண்மைத் துறையில் இளங்கலை பட்டம் (பிஎஸ்சி அக்ரி) முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர் பட்டம் பெறவில்லை என்றால், அந்த கடையை நடத்துவோர் பிஎஸ்சி அக்ரி, உயிரி வேதியியல், பயோ டெக்., வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பிரிவில் ஏதேனும் ஒன்றில் அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சான்றிதழுடன், அரசு கணக்கில் ரூ.300 செலுத்திய ஒப்புகை சீட்டுடன் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் புதுப்பித்தல் மற்றும் புதிய உரிமம் பெறுவதற்கு, இனி வரும் நாள்களில் இந்த வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
மேலும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் போதும் உரிமத்தின் எண் மாறுபடும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment