மூலிகைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவின் சார்பில், சிறப்பு சித்த மருத்துவ முகாம், மூலிகைக் கண்காட்சி நல்லிபாளையம் சமுதாயக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து, மூலிகைக் கண்காட்சியைத் திறந்து, சித்த மருத்துவ முகாமை தொடக்கி வைத்துப் பேசியது:
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் 1,000-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிறந்த சிகிச்சை பெற ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் வீதம் அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறும் வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கர்ப்பிணிகளின் நலன் கருதி 10 சித்த மருந்துகளை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட சித்த மருத்துவ மூலிகைகள் அதிகம் நமது பகுதிகளில் இருக்கின்றன. அவற்றைப் பொதுமக்கள் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற மூலிகைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார். முன்னதாக, சித்த மருத்துவத் துறையின் சார்பில், அமைக்கப்பட்ட மூலிகைக் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்ட ஆட்சியர் கர்ப்பிணிகள், பொதுமக்களுக்கு நெல்லிக்காய் சாறு, நில வேம்பு கஷாயத்தை வழங்கினார். பின்னர், முகாமில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு 10 வகையான சித்த மருந்துகளையும் வழங்கினார். முகாமில், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ ஆலோசகர் செ.பூபதிராஜா வரவேற்றார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ரா.ஜெமினி, நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ரா.கரிகாலன், நகராட்சி ஆணையர் எம்.செந்தில்முருகன், வட்டாட்சியர் கதிரேசன், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் தொ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment