Wednesday, December 30, 2015

உலக அளவில் 70 சதவீத மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தி வேளாண்மை ஆராய்ச்சிக்கழக முதன்மை துணை இயக்குனர் தகவல்



பெரியகுளம்
உலக அளவில் 70 சதவீத மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்று வேளாண்மை ஆராய்ச்சிக்கழக முதன்மை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கருத்தரங்குதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இயற்கைவள மேலாண்மை இயக்குனரகம் இணைந்து நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் நானோ தொழில் நுட்பத்தின் மூலம் பழங்களை பாதுகாத்தல் என்ற திட்டத்தில் மா சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பாலமோகன் தலைமை தாங்கினார்.
பழவியல் துறை தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் கே.எஸ்.சுப்பிரமணியன் திட்டம் குறித்து விளக்கி பேசினார். தமிழ்நாடு பழ உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அருண், தமிழ்நாடு வாழை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கருப்பையா, கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயி சாந்தகுமார், பெரியகுளம் மா விவசாயிகள் சங்க தலைவர் எம்.ஜி.சந்தானம் ஆகியோர் பேசினார்கள்.
முதன்மை துணை இயக்குனர்புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக தோட்டக்கலை முதன்மை துணை இயக்குனர் என்.கே.கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழம், உலகளவில் 70 சதவிகிதம் இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. எனினும் இந்தியாவில் நிலவும் வெப்பநிலை, குறைந்த எண்ணிக்கையில் குளிர்சாதன கட்டமைப்பு, அறுவடைக்கு பிந்தைய தொழில் நுட்பங்களை கடைபிடிக்காதது ஆகிய காரணங்களால் 30 முதல் 35 சதவீத பழங்கள் வீணாகி பெருமளவில் சேதம் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் இழப்பினால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய பழங்களின் அளவு வெகுவாக குறைகிறது.
ரூ.30½ கோடிஇந்த பேரிழப்பை தடுக்க கனடா நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் முன்வந்து நிதியுதவி செய்துள்ளது. கனடா பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கனடா அரசு இணைந்து நானோ தொழில் நுட்பம் மூலம் மாம்பழங்களை கெடாமல் பாதுகாத்தல் என்ற ஆராய்ச்சி திட்டத்தினை சர்வதேச உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி நிதியின் கீழ் மொத்தமாக ரூ.30 கோடியே 50 லட்சம் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் 7 முதன்மை ஆராய்ச்சி நிலையங்களான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் கல்ப் பல்கலைக்கழகம், கனடா தொழில்நுட்ப நிலையம், இலங்கை கொகைன் வேளாண் பல்கலைக்கழகம், டான்சானியா, நைரோபி, கென்யா, மேற்கு இந்திய தீவுகள் ஆகியவற்றின் பல்கலைக்கழங்கள் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.11 கோடியே 40 லட்சம் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பீட்டை குறைத்து, மாம்பழங்களின் தரத்தினை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்.
மேற்கண்டவாறு அவர் பேசினார். விவசாய கருத்தரங்கில் மாநில அளவில் 500–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு முடிவில் பேராசிரியை ஜானவி நன்றி கூறினார்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment