Friday, December 25, 2015

பொன்னி நெற் பயிரில் குலை நோயைக் கட்டுப்படுத்த யோசனை


ராமநாதபுரம் மாவட்டத்தில் டீலக்ஸ் பொன்னி என்று அழைக்கப்படும் பி.பி.டி. 5204 நெல் ரகத்தில் குலைநோய் தாக்குதல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த வேளாண் உதவி இயக்குநர் ஆர்.ராமசாமிப் பாண்டியன் யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
 நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 6300 எக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பொதிப் பருவத்தில் உள்ள இப்பயிரில் நவம்பர் மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை மற்றும் மேகமூட்டம் காணமாக குலைநோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. ராமநாதபுரம் அருகே பேராவூர், தேவிபட்டினம், சம்பை ஆகிய கிராமங்களில் டீலக்ஸ் பொன்னி என்று அழைக்கப்படும் பி.பி.டி. 5204 நெல் ரகத்தில் தான் இந்நோய் தாக்குதல் தெரிகிறது.
நோயின் அறிகுறிகள்:   குலைநோய் பயிரின் எந்தப் பருவத்திலும் தாக்கலாம். இலை மேல்பரப்பு, கணு மற்றும் தண்டுப்பகுதிகளில் நீள் வடிவத்தில் கண் வடிவப் புள்ளிகள் காணப்படும். புள்ளியைச் சுற்றி சாம்பல் நிறத்திலும், ஓரத்தில் சிவப்பு நிறத்திலும் காணப்படும். கண் வடிவப் புள்ளிகள் ஒன்றாக இணைந்து இலைமுழுவதும் பரவி இலை காய்ந்தது போலாகி விடும். தூரத்திலிருந்து பார்த்தால் பயிர் எரிந்தது போலத் தெரியும். இலைக் கணுக்கள் கருப்பு நிறமாகி ஒடிந்தது போலத் தெரியும். குலை நோய்த் பூக்கும் பருவத்திலும் கதிரில் உள்ள மணிகளையும் தாக்கும்.
குலைநோயை வராமல் பாதுகாத்தல்:  தழைச்சத்தைப் பிரித்து யூரியாவுடன் கலந்து இட வேண்டும். வரப்பில் உள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும். நோய்த் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சாணக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் மூலமாக ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : Dinamani

No comments:

Post a Comment