முதலில் நாம் பாத வெடிப்புக்கான ஒரு எளிய மருந்தை தயார் செய்வோம். இதற்கு தேவையான பொருட்கள் மஞ்சள் பொடி, சுண்ணாம்பு, தேன். சிறிதளவு மஞ்சள் பொடியுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும். இவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். தொடர்ந்து கலக்கும் போது அவற்றின் நிறம் சிவப்பாக மாறி ஒரு களிம்பு போல் ஆகிவிடும். இதை நாம் தொடர்ந்து பாத வெடிப்பின் மீது பூசி வந்தால் தகுந்த நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள் மங்கல பொருளாகவும், உணவுக்கான வாசனை பொருளாகவும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இதை பாத வெடிப்புகளுக்கு பயன்படுத்தும் போது பூஞ்சை காளான்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைகின்றன. அதே போல் துளசியை பயன்படுத்தி சேற்றுப்புண்ணுக்கான மருந்தை இப்போது நாம் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் துளசி இலை, பூக்கள். இலுப்ப எண்ணெய். இலுப்ப எண்ணெய் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
பூக்கள், இலை, விதைகள் ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக் கொண்டு அதை இலுப்ப எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். பின்னர் இதை நீர் விடாமல் மையாக களிம்பு போல் அரைக்க வேண்டும். இதை சேற்று புண்ணுக்கு பூசி வந்தால் தகுந்த நிவாரணம் கிடைக்கும். சேற்றுப்புண் என்பது பூஞ்ச காளானால் ஏற்படும் ஒரு தோல் நோயாகும். இது தோலிலே தங்கியிருந்து அரிப்பு, நீர் கசிவு போன்றவற்றை உருவாக்குகிறது.
மழை காலத்தில் நாம் நீண்ட நேரம் ஈரத்தில் நடப்பதாலும், சேற்றிலே நடப்பதாலும் இது போன்ற தொந்தரவுகள் நம்மை பாதிக்கின்றன. இதற்கு இந்த துளசி களிம்பு மிக சிறப்பாக வேலை செய்கிறது. அதே போல் கால் நகங்களை பாதிக்கக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். மருதாணியை பயன்படுத்தி சேற்று புண், நகசுத்தி போன்றவற்றுக்கான மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மருதாணி இலைகள், கடுக்காய் பொடி, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு.
மருதாணி இலைகளை நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இதை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு கடுக்காய் பொடி சேர்க்க வேண்டும். சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்க்க வேண்டும். அரை பழம் எலுமிச்சை சாறை இதில் பிழிந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் நல்லெண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை நன்றாக கலக்கும் போது களிம்பு போல் வரும். இதை சேற்றுப்புண்ணுக்கு பூசி வருவதால் குணம் கிடைக்கிறது. அதே போல் நக சுத்திக்கும் இதை பூசி வருவதன் மூலம் அதில் இருந்து குணம் பெறலாம். இவ்வாறு அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாம் குணம் பெறலாம்.
Source : Dinakaran
No comments:
Post a Comment