Friday, December 18, 2015

மலர், பழச்செடிகள் கண்காட்சி அடுத்த வாரம் தொடங்கும்:ஆட்சியர் தகவல்


காரைக்காலில் மலர், பழச்செடிகள் கண்காட்சி அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் தெரிவித்தார்.
இக்கண்காட்சிக்காக மகாராஷ்டிர மாநிலம் புனே, ஆந்திர மாநிலம் கடியம் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர், பழச்செடிகள் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், நிலையத்தில் பயிர் செய்யப்பட்டிருக்கும் மலர், பழச்செடிகளும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
இதற்காக, நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ள செடிகளை தயார்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். அவரிடம், வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், கண்காட்சிக்கு வரவழைத்துள்ள செடிகள் குறித்தும் நிலையத் தலைவர் ஆ.சுரேஷ் விளக்கினார்.
பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காரைக்கால் விவசாயிகள், பொதுமக்கள் விருப்பத்துக்கேற்ப மலர், பழச்செடிகள் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிலையம் செய்திருப்பது வரவேற்புக்குரியது. காரைக்கால் நகரப் பகுதியில், பொதுமக்கள் பங்கேற்கும் வகையிலான இடத்தில் அடுத்த வார முற்பகுதியில் கண்காட்சி நடத்தப்படும்.
காரைக்கால் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் விவசாயிகளுக்காக நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஒவ்வோர் ஆண்டும் 30 டன் விதை நெல் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கி வருகிறது. அடுத்த ஆண்டு 40 டன் விதை நெல் உற்பத்தி செய்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலையத்துக்குத் தேவையான ஆதரவை மாவட்ட நிர்வாகம் அளித்து வருகிறது.
நிலையத்தில் காய்கறி உற்பத்தி, பொங்கல் பண்டிக்கைக்குத் தேவையான மஞ்சள் சாகுபடி, காளான் வளர்ப்பு, முயல் வளர்ப்பு தீவிரமாக நடைபெறுகிறது. அடுத்த ஆண்டிலிருந்து கூடுதல் நிலப்பரப்பில் காய்கறி உற்பத்தி செய்ய நிலையத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் விவசாயிகளுக்கு தண்ணீர் தேவை மிகுதியாக உள்ளது. நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் புதுச்சேரி அரசு சீரிய முறையில் செயலாற்றும் என்றார் ஆட்சியர்.

Source : Dinamani

No comments:

Post a Comment