Friday, December 4, 2015

யாழ்ப்பாணம் தேங்காய் விளைச்சல் சூப்பர்: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி


கீழக்கரை:கீழக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாழ்ப்பாணம் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. நல்ல விலை கிடைப்பதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கீழக்கரை, காஞ்சிஞ்சிரங்குடி, திருப்புல்லாணி, சேதுக்கரை, முத்துப்பேட்டை, பெரியட்டினம், வண்ணாங்குண்டு, தினைக்குளம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் அதிகளவு தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட தென்னை மரங்கள் அதிகமாக உள்ளன. யாழ்ப்பாணம் தென்னை மரங்களில் காய்ப்புத்திறன் அதிகம் மட்டுமின்றி தேங்காய்கள் பெரிசாகவும், எண்ணெய் சத்து நிறைந்ததாகவும் உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் யாழ்ப்பாணம் தேங்காய்க்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும் அதிக மவுசு உள்ளது. வியாபாரிகள் போட்டி போட்டு தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனர். உள்ளுர் தேங்காய்கள் கிலோ ரூ.20 என்றால் யாழ்ப்பாணம் தேங்காய் கிலோ ரூ.25 க்கு விற்பனையாகிறது.
பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் யாழ்ப்பாணம் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேங்காய் வியாபாரி செல்வம் கூறுகையில்,"" கீழக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வழக்கத்தை விட அதிகமாக விற்பனைக்கு வருகிறது.
யாழ்ப்பாணம் தேங்காய்க்கு ஈரோடு, காங்கேயம், வெள்ளக்கோயில், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இதர தேங்காய்களை விட யாழ்ப்பாணம் தேங்காய் விலை சற்று அதிகம்.'' என்றார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment