Friday, December 4, 2015

வரத்து குறைவு: பறக்குது காய்கறி விலை: 4 நாட்கள் வரை இதே நிலை தான்

வரத்து குறைவாக உள்ளதால், பெரும்பாலான காய்கறிகளின் விலை, 1 கிலோ, 100 ரூபாய் வரை சென்றுள்ளது. 10 ரூபாய் விலை கொண்ட சுரைக்காய், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'மழை விட்டால், நான்கு நாட்களில் இயல்பு நிலைக்கு வரும்' என, வியாபாரிகள் கூறினர்.

இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவையும் மழை விட்டு வைக்காததால், தமிழகத்திற்கான காய்கறி வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 300 லாரிகளில் காய்கறி வரும். ஒரு வாரமாக, 100 லாரிகள் கூட வரவில்லை. நேற்று, 110 லோடுகளில் காய்கறி வந்தது. இரண்டு நாட்களாக காய்கறி வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. நேற்று மழை சற்று விட்டதால், வியாபாரிகள் குவிந்தனர்; இதனால், காய்கறி விலை எகிறியது.

நேற்று, 1 கிலோ அவரை - 120, பீன்ஸ் - 110, முருங்கை - 110, கத்தரி, வெண்டை - 60; பட்டாணி - 180, புடலை - 70, பீர்க்கங்காய், தக்காளி, வெங்காயம் - 60; பீட்ரூட் - 40, உருளை - 35 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

பத்து ரூபாய்க்கு விற்ற சுரைக்காய் - 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புதினா, கொத்தமல்லி சிறு கட்டு, 25 ரூபாய், கருவேப்பிலை சிறு கட்டு, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் ஆலோசகர் சவுந்தரராஜன் கூறுகையில் ,''பெரும்பாலான காய்கறிகளின் விலை, 1 கிலோ, 100 ரூபாய் வரை சென்றுள்ளது. வரத்து குறைவாக உள்ளது. மழை விட்டால், நான்கு நாட்களில் இயல்பு நிலை ஏற்படும்; விலை கட்டுக்குள் வரும். மழை விடுமா என்று தெரியவில்லை; மழை தொடர்ந்தால், மேலும் விலை உயர்வது தவிர்க்க முடியாது,'' என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment