'இயற்கை விவசாய திட்டத்தின் கீழ் கக்குலா, எடக்காடு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சங்கர் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது; 28 கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்தன.
தரமான பால் எது?
கூட்டத்தில், 'ஆவின்' அதிகாரிகள் கூறுகையில்,'பாலுக்கு, அரசு நிர்ணயம் செய்யும் விலைப் பட்டியல் படி தான் விலை கணக்கிடப்படுகிறது. சமீபத்தில், 21 லி., பால் சேகரிக்கப்பட்டு, அதன் தரம் பரிசோதிக்கப்பட்டதில், கொழுப்பு சத்து, 3.4 சதவீதம், பிற சத்து, 7.2 சதவீதம் இருந்தது. 'குறைந்தபட்சம் கொழுப்பு சத்து, 3 சதவீதம், பிற சத்து, 7.7 சதவீதமாக இருந்தால் மட்டுமே, அது தரமான பாலாக கருதப்படும். தரம் குறைந்த பாலிற்கு, விலை வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை' என்றனர்.
விரைவில் இன்சூரன்ஸ்
கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில்,'ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமையில் இருந்து மானியத் தொகை பெற்று, விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சம்மந்தப்பட்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தினரிடம் விளக்கம் கேட்ட போது, பெறப்பட்ட வரையிலான மானியத் தொகைக்குரிய பாலிசி, நடப்பு வாரத்தில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்' என்றனர்.
இரு கிராமங்கள் தத்து
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'தோட்டக்கலை துறை சார்பில், அவ்வப்போது நடத்தப்படும் விவசாய மேளாவில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, 'பரம்பராகட் கிரிஷ் விகாஸ் யோஜனா' திட்டத்தில், இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கோத்தகிரி கக்குலா, ஊட்டி எடக்காடு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமங்களில், 50 ஏக்கர் நிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாய பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இயற்கை விவசாயத்திற்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படும்' என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'லேண்டனா, பார்த்தீனியம் போன்ற விஷச் செடிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன,' என்றனர். மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'இலவச மின் இணைப்புப் பெற தகுதியுள்ள விவசாயிகள் பட்டா நகல், பத்திரங்கள், வி.ஏ.ஓ., தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட உரிமைச் சான்று, கிணற்றை உள்ளடக்கிய வரைபடம், வரி செலுத்தியதற்கான ரசீதை வழங்க வேண்டும்' என்றனர். கூட்டத்தில், விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், தோட்டக்கலை இணை இயக்குனர், பிற துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment