கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனப்பகுதியில் சந்தன மரங்களை வளர்க்கும் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் மூலம் சந்தன மர விதைகள் நேர்த்தி செய்யப்பட்டு, விதைக்கும் பணிகள் துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், 3,200 ஹெக்டேரில் 55 ஆயிரம் சந்தன மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், சந்தன மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த, வனத்துறையினர், முதல்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதற்காக நேர்த்தி செய்யப்பட்ட சந்தன மரவிதைகளுடன், சீதா மற்றும் துவரை விதைகளை கலந்து ஈரப்பதம் காக்கும் ஜெல் ஆகியவற்றை கொண்டு, மண் மற்றும் சாணத்துடன் கலந்து, அரசு பள்ளி மாணவர்கள், மலை வாழ் மக்கள் மற்றும் வனப்பணியாளர்களை கொண்டு, உருண்டையாக பிடிக்கும் பணி, கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்தில் துவங்கியது. இந்த பணியை, தர்மபுரி மண்டல வனபாதுகாவலர் உலகநாதன், மாவட்ட வன அலுவலர்கள் ராஜேந்திரன், பன்னீர்செல்வம், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் பாபு ஆகியோர் பார்வையிட்டு, சந்தன மர விதைகளை, வனப்பகுதியில் விதைக்கும் முறைகள் குறித்து விளக்கி கூறினர். மேலும், சந்தன மர விதைகள் விதைப்பு பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. சந்தன மர விதைகள் விதைப்பு பணி, ஒரு மாத காலத்தில் முடிக்கப்பட்டு, செடிகள் வளர்ந்த பின்பு வனத்துறையினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொண்டு, ஒவ்வொரு செடியும் பத்திரமாக வளர்க்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment