Tuesday, December 22, 2015

திருந்திய நெல் சாகுபடியில் தொழில்நுட்பங்கள்

திருந்திய நெல் சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். திருந்திய நெல் சாகுபடிக்கு வேளாண்துறையினர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு விதை, உரம், மருந்து உட்பட பல்வேறு பொருட்களை 100% மானியமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருந்திய நெல் சாகுபடியில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாந்தாமணி கூறியதாவது, தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் அல்லது வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். 

ஒரு ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய 1 சென்ட் நாற்றாங்கால் இருந்தாலே போதுமானது. இதன் மீது பாலிதீன் விரிப்புகளை பயன்படுத்தி மரச்சட்டங்களை அமைத்து, மேட்டுப் பாத்திகள் அமைத்து அதில் மக்கிய தொழுஉரம் 9:1 வீதம் பரப்பி விதைக்க வேண்டும். 14 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். சரியான இடைவெளிக்கு மார்க்கர் கருவிகளை பயன்படுத்த வேண்டும். நடவு வயல் துல்லியமாக சமப்படுத்த வேண்டும். 

22.5 சென்டி மீட்டர்*22.5 சென்டிமீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்துக்கு ஒரு நாற்று மட்டும் நடவு செய்ய வேண்டும். நீர் மறைய நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். 2.5 சென்டி மீட்டருக்கு அதிகமாக நீர் நிறுத்த கூடாது. கோனோவீடர் கொண்டு களை எடுக்க வேண்டும். நடவு செய்த 10ம் நாள் முதல், 10 நாட்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும்.  உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியா போன்றவற்றை ஏக்கருக்கு தலா 7 பாக்கெட் வீதம் இட வேண்டும். பச்சை இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையான தழைச் சத்தினை மேல் உரமாக இட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment