பொள்ளாச்சி : சத்துக்கள் குறையாமல் மண்ணை பாதுகாத்தால், விளைச்சலில் இரு மடங்கு உற்பத்தியை பெருக்கலாம்; மும்மடங்கு வருமானத்தை பார்க்கலாம் என, வேளாண் இணை இயக்குனர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நேற்று உலக மண் தினம். இயற்கை மண்ணில் பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, ெமக்னீசியம், துத்தநாகம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. இச்சத்துகளை இழந்த மண்ணின் தன்மையை ஆராய்ந்தால், நச்சுக்களால் விவசாயம் முடங்கி வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கனமழை பெய்யும் போது, சத்து மிக்க மேல் மண் அடித்து செல்லப்பட்டு விடுகிறது.
இருக்கும் மண்ணின் வளத்தை அதிகரித்து, பாதுகாக்க வேண்டும் என்பதையே மண்வள தினம் உணர்த்துகிறது. தற்போது, மண்ணின் சத்துக்கள் குறைந்து வருவதால், மழை நீர் நேரடியாக நிலத்தின் அடியில் செல்லாமல் வழிந்தோடுகிறது.
இதனால், அனைத்து சத்துக்களும் குறைந்து, மண் மலட்டுத்தன்மையை பெற்று வருகிறது. ஆகவே, இதுகுறித்து விவசாயிகள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தவே, ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய விவசாயிகள் பங்கு கொண்ட மண் பரிசோதனை அடிப்படையில், ஊட்டச்சத்து நிர்வாகம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பொள்ளாச்சி வடக்கு, வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சப் - கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், அட்மா திட்ட தலைவர் சக்திவேல் பங்கேற்றனர்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சந்திரசேகரன் பேசியதாவது: மாவட்டத்தில், 98 கிராமங்களில் மண் பரிசோதனை முடிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மண் பரிசோதனை அடையாள அட்டை வழங்கும் இயக்கம் துவங்கியுள்ளது. அடுத்த ஆண்டில் இத்திட்டம் நிறைவு பெறும்.
மண்ணில் உள்ள நுண்ணுாட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மண்ணில், 16 வகையான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவற்றை பாதுகாப்பதே மண் தினம் கொண்டாடுவதன் நோக்கம். தவிர, சாகுபடி செய்யப்படும் பயிர்கள் மூலம் இரு மடங்கு உற்பத்தியை பெருக்க வேண்டும்;
இதன் மூலம் மூன்று மடங்கு வருவாயை கூட்ட வேண்டும் என்பதே திட்டத்தின் இலக்காகும்.
இதற்கு உற்பத்தி செலவை குறைக்க வேண்டும். அதாவது மண் வளத்தை காக்க, உரச் செலவை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு சந்திரசேகரன் பேசினர்.
கருத்துக்கள் பரிமாற்றம்
முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு 'மண் வள இயக்கம்' சார்பில் மண் பரிசோதனை அட்டைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மண் மாதிரிகள் சேகரிப்பு தொழில் நுட்பம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், மண்மாதிரி சேகரித்தல் செயல்விளக்கம், மண்ணில் காணப்படும் பிரச்னை, அதற்கான தீர்வுகள் குறித்து பேசப்பட்டு, விவசாயிகளின் நேரடி கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர்கள், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் மற்றும் கள அலுவலர்கள் பங்கேற்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment