ஊட்டி: ஊட்டியில் உலக மண்வள தினவிழாவை முன்னிட்டு, விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா நடந்தது.
தோட்டக்கலை துறை, மலைப்பயிர்கள் துறை சார்பில், நடந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குனர் மணி வரவேற்று பேசியதாவது:மண் வளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், டிசம்பர், 5ல், உலக மண் வள தினம் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை துறை மூலம் மண் வள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஊட்டி வட்டாரத்தில், 807 மண் மாதிரியும், குன்னுார் வட்டத்திற்கு, 543, கோத்தகிரி வட்டத்திற்கு , 518 மற்றும் கூடலுார் வட்டத்திற்கு, 1134 மண் மாதிரிகள் எடுப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. உலக மண் தினத்தை ஒட்டி, ஊட்டி வட்டத்தை சேர்ந்த, 100 விவசாயிகளுக்கு, மண்வள அட்டை மற்றும் இதர வட்டாரத்துக்கு, 250 மண்வள அட்டை வழங்கப்படுகிறது.
தவிர, தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்ட இயக்கத்தின் கீழ், உயர்ரக பசுமைக் குடில் அமைத்த, 5 பயனாளிகளுக்கு, 15 லட்சத்து, 22 ஆயிரத்து, 646 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மணி பேசினார்.
அர்ஜூணன் எம்.பி., தலை மை வகித்து, பயனாளிகளுக்கு மண் வள அட்டை வழங்கி, திட்டங்கள் குறித்து பேசினார்.
மண்வள ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,'விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மண்மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பவேண்டும். ஆய்வுக்குப்பின், மண்ணில் உள்ள அமிலத் தன்மை, கார தன்மையை அறிந்து, மண்ணில் குறைபாடுகள் இருப்பின், அதற்கேற்ற வகையில் மண்ணை பண்படுத்தி, பயிர் செய்வதன் மூலம், கூடுதல் மகசூல் கிடைக்கும்' என்றனர்.
இதில், ஊட்டி மண் ஆய்வுக்கூட வேளாண் அலுவலர் ஹேமாவதி, தோட்டக்கலை உதவி இயக்குனர் மீராபாய் உட்பட அலுவலர்கள், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
* கூடலுாரில், தோட்டக்கலை துறை சார்பில்,உலக மண்வள தினத்தை முன்னிட்டு, மண்வள அட்டை வழங்கும் விழா நடந்தது. கிடங்கு மேலாளர் ராமசாமி வரவேற்றார்.
விழாவுக்கு, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சிபிலாமேரி தலைமை வகித்து பேசுகையில்,“ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படும், விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, இயற்கை உரங்களை பயன்படுத்தினால், பெரும் பயன் பெறலாம்,” என்றார். ஆவின் இணைய தலைவர் மில்லர், விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார். உதவி வேளாண்மை அலுவலர் அப்பிராஜ் நன்றி கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment