Monday, December 7, 2015

வேளாண்மைத்துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது கலெக்டர் தகவல்


வேளாண்மைத்துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று கலெக்டர் ராஜேஷ் கூறினார்.
உலக மண்வள நாள் விழா
பையூர் மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை துறை சார்பில் உலக மண்வள நாள் விழா கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் சபா நடேசன் வரவேற்றார். தோட்டக்கலை இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினார்கள்.நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:–
முன்னோடி மாநிலம்
வேளாண்மை துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக இருக்க தமிழக முதல்–அமைச்சர் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். மேலும் ஒருங்கிணைந்த விவசாயிகளுக்கு கையேடு வழங்கப்படுகிறது. இதுவரை நமது மாவட்டத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் வேளாண்மை குறித்த விளக்க கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறையில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. மேலும் 2–வது பசுமை புரட்சியை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை முதல்–அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியம், எண்ணெய்வித்துப் பயிர்கள், பருத்தி, கரும்பு, காய்கறிகள் மற்றும் மலர்கள் 2 லட்சத்து 55 ஆயிரத்து 13 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்ற இலக்கை அடைந்து வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் கூறினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் முகமதுஅஸ்லம், காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜமுனாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் குப்புசாமி, ராமச்சந்திரன், கோவிந்தராஜன், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ராமகவுண்டர், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் லோகாபிராமன், வேளாண்மை விற்பனை வணிகத்துறை துணை இயக்குனர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment