Monday, December 7, 2015

மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர் செய்தால் அதிக லாபம் பெறலாம்: ஆட்சியர்


மண்ணின் தன்மை அறிந்து அதற்கேற்ற பயிர் செய்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்தார்.
 விருதுநகர் அருகே சூலக்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மண் வள தின விழாவில் அவர் பேசியது:  நீடித்த நிலையான வேளாண்மைக்கு மண் ஆய்வு செய்தல் அவசியம். அறிவியல் பூர்வமான விவசாயத்தின் முதல் படி மண் ஆய்வு தான். வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மண் வள அட்டை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு செய்து ஒருங்கிணைந்த உரப்பரிந்துரை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் போன்ற முக்கிய சத்துகளையும், கால்சியம், மெக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலை சத்துக்களையும், தாமிரம், துத்தநாகம், போரான், மக்னீசியம் போன்ற நுண்சத்துகளையும், அமிலம், உவர் மற்றும் சுண்ணாம்புத் தன்மைகளையும் கண்டறிந்து மண்வள அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் உரச் செலவு, உரமிடுதலின் அளவு குறைகிறது. எனவே மண்ணின் தன்மைக்கேற்ப பயிரினை தேர்ந்தேடுத்து பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும் என்றார்.
 முன்னதாக வேளாண்மை, வேளாண்மை பொறியியல், தோட்டக்கலைத்துறைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சியை அவர் திறந்து வைத்து,மானிய உதவியுடன் கூடிய கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் கா.பாண்டியராஜன், வேளாண் துறை இணை இயக்குநர் கனகராஜன், துணை இயக்குநர் (பயிறு, விதை, எண்ணெய் வித்து) வன்னிய ராஜன், துணை இயக்குநர் வேளாண்மை விற்பனை முத்து முனியாண்டி உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment