Wednesday, December 2, 2015

துவரம் பருப்பு விலையை தொடர்ந்து பூண்டு விலை கடும் உயர்வு: கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரிப்பு


 பருப்பு விலையை தொடர்ந்து பூண்டு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை கடந்த மாதம் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அதாவது, கிலோ ரூ.250 வரை விற்பனையானது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து பருப்பை இறக்குமதி செய்தது. மேலும் அதிரடி சோதனை நடத்தி பதுக்கி வைத்திருந்த பருப்பை பறிமுதல் செய்தது. இதனால், தற்போது துவரம் பருப்பு ரூ.170 என்ற பழைய விலைக்கே திரும்பியுள்ளது. இந்த விலை உயர்வு அடங்குவதற்குள் தற்போது பூண்டு விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கு மலைப்பூண்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது தற்போது அடியோடு நின்றுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதியில் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பூண்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கடந்த வாரம் ரூ.150க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மலைப்பூண்டு தற்போது ரூ.250ஆக உயர்ந்துள்ளது. மலைப்பூண்டு (2ம் ரகம்) ரூ.120லிருந்து ரூ.220 ஆக விலை அதிகரித்துள்ளது. நாட்டுப்பூண்டு ரூ.120லிருந்து ரூ.200, நாட்டுப்பூண்டு (2ம் ரகம்) ரூ.100லிருந்து ரூ.170 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ெபாதுமக்களுக்கு ேமலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறுகையில், “இந்தியாவில் குஜராத், மத்திய பிரதேசத்தில் பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த மாதம் பருப்பு விலை உயர்வை தொடர்ந்து, விவசாயிகள் பூண்டு உற்பத்தியை நிறுத்தி விட்டு தற்போது பருப்பு உற்பத்தியில் இறங்கியுள்ளனர். மேலும், வடமாநிலங்களில் பூண்டு அதிக அளவில் பதுக்கப்பட்டுள்ளது. இதுவே பூண்டு விலை உயர்வுக்கு காரணம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது வரத்து வந்த பிறகே பூண்டு விலை கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை குறைய வாய்ப்புள்ளது. அது வரை அதிகரிக்கத்தான் செய்யும்” என்றார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment