Thursday, March 10, 2016

நிலத்தாய்க்கும் போர்வை தேவை!



தென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார், சிவகங்கை சாக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராமனாதன். அவர் கூறியது: 12 ஏக்கரில் தென்னையும், 4 ஏக்கரில் கரும்பு விவசாயமும் செய்து வருகிறேன். 750 தென்னை மரம் உள்ளது. ஆண்டுக்கு 7 முறை காய்பறிப்பு மேற்கொள்கிறேன். ரூ.8 லட்சம் வரை வருமானம் வருகிறது. காரணம் இயற்கை விவசாயம் தான். களைக்கொல்லியால் மணலாகி போன நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. மணலை மீண்டும் மண்ணாக மாற்ற வேண்டும்.
அதில் ஒரு வகை தான் மூடாக்கு. பயிர் கழிவுகளை நிலத்துக்கு திருப்பியளிப்பது. என் நிலத்தில் உள்ள தென்னை மட்டை, ஓலை ஆகியவற்றை வெளியே விற்பதில்லை. வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட இயந்திரத்தில் இவற்றை அரைத்து நிலத்திலேயே தூவுகிறேன். மாதம் ஒருநாள் 2 மணி நேரம் அரைத்தால் போதும். மூன்று மாதத்தில் இவை மட்கி விடும்.
மட்கிய தென்னைமட்டை கழிவுகளில் மண்புழு தானாகவே உருவாகிறது. மண் வளப்படுகிறது. தென்னைக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கிறது. மண்புழுவை சாப்பிட ஆயிரம் நாட்டுக்கோழிகள் வளர்க்கிறேன். இவை ஒரு நாளைக்கு 50 முதல் 100 முட்டை வரை இடுகிறது. இவற்றின் கழிவு தென்னைக்கு உரமாக பயன்படுகிறது. 
கோழிகள் தென்னையில் கரையான் அரிக்காமல் பார்த்து கொள்கிறது. தென்னைக்கு இடையில் ஊடுபயிராக செம்பருத்தி பயிரிட உள்ளேன். இதற்காக அரிமளத்தில் 10 ஆயிரம் நாற்று தயார் நிலையில் உள்ளது. தென்னை விவசாயிகள் லாபம் இல்லை என்று சொல்லக்கூடாது என்பதே என் விருப்பம். மண்ணை பாதுகாக்க மண்புழுவை நாம் வளர்த்தால், மண்புழு நம்மை காக்கும், என்றார். ஆலோசனைக்கு... 89032 24222.

Source : Dinamalar

No comments:

Post a Comment