பாரம்பரிய நெல்லை இயற்கை வேளாண்மையில் மேற்கொள்ள வேண்டுமென விதைத்தேர்வு பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை வேளாண்மை மற்றும் கிரியேட் பயிற்சி மையத்தில் விவசாயிகளுக்கு விதைத்தேர்வு, விதை பாதுகாப்பு, விதை நேர்த்தி குறித்த பாரம்பரிய முறையில் செய்முறை விளக்கத்துடன் பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. தமிழக இயற்கை உழவர் இயக்க திருவாரூர் மாவட்ட பொருளாளர் சண்முகம் தலைமை வகித்தார். இயற்கை விவசாயிகள் லால்குடி சம்பத், திருச்சி சுரேஷ் கண்ணா, வெங்கடேஷ், மதுரை மகேந்திரன் முன்னிலை வகித்தனர். கிரியேட் களப்பணியாளர் வடிவழகன் வரவேற்றார். பயிற்சியில் நமது நெல்லை பாதுகாப்பம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் பேசுகையில், நம்முடைய பாரம்பரிய நெல்களை பாதுகாப்பது, மறு உற்பத்தி செய்வது, உழவர்களுடைய கைமாற்றி கொள்வது மூலம் உழவர் கையில் விதைகள் இருந்தன. பசுமை புரட்சி திட்டத்தால் விதைகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு ஆராய்ச்சி என்ற பெயரில் குள்ளரக பயிராக திரும்ப வந்து கொண்டிருக்கிறது. அதுக்கு பெயர் ஒட்டுரகம், இந்த ரகம் வெள்ளம் வறட்சிகளை தாக்கு பிடிக்கவில்லை. எனவே இதற்கு மாறாக நம் முன்னோர் பயன்படுத்திய பாரம்பரிய நெல் ரகங்களை உழவர்கள் மத்தியில் பரப்புவதற்கு நம்மாவாழ்வர் எடுத்துரைக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பரப்பி வருகிறோம். ரசாயன உரங்களால் மண்வளம் கெட்டுவிட்டது. எனவே பசுந்தாள் உரச் செடிகள், பயிர்வகைகள் தானியங்கள் விதைப்பு செய்து வளர்த்து உழவு செய்து அதை உரமாக்கி பாரம்பரிய நெல்லை இயற்கை வேளாண்மையில் மேற்கொள்ள வேண்டும் என்றார். கருத்தரங்கில் அதிக மகசூல் எடுக்க விதை தேர்வு, விதை பாதுகாப்பு, விதை நேர்த்தி செய்முறை விளக்கத்துடன் உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 உழவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment