Friday, December 4, 2015

தொடர் மழை: தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க வேளாண் துறை யோசனை


அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையிலிருந்து தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க மாவட்ட தோட்டக்கலைத் துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை அரியலூர் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூர் மாவட்டத்தில் முந்திரி, காய்கறி பயிர்களான கத்தரி, மிளகாய், முருங்கை, கொடி வகை காய்கறிகள், மரவள்ளி, வாழை ஆகிய பயிர்கள் 32,000 ஹெக்டருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பதிவாகியுள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் சராசரி வடகிழக்குப் பருவமழை அளவு 485 மி.மீ., ஆகும். ஆனால் இதுவரை 569 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பயிரிடப்பட்டுள்ள தோட்டக்கலைப் பயிர்கள் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்.மழைநீர் தேங்கியுள்ள வயல்களிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பொருட்டு நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி வயலில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட வழிவகை செய்ய வேண்டும். இலைவழி ஊட்டமாக 1 ஏக்கருக்கு 2 கிலோ யூரியா அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டும், 1 ஏக்கருக்கு 200 கிராம் நுண்ணூட்டக் கலவையான ரெக்சோலினும் கலந்து தெளிக்க வேண்டும்.
காப்பர் ஆக்ஸிகுளோரைடு மருந்தை 1 லிட்டருக்கு 3 கிராம் வீதத்தில் கலந்து கரைசல் நன்கு பயிர்களின் வேரில் படும்படி ஊற்ற வேண்டும். பூச்சி, நோய் தாக்குதலுக்கு தற்போது சாதகமான சூழ்நிலை நிலவி வருவதால் அன்றாடம் வயலினை ஆய்வு செய்து ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்டு தொடர் மழையிலிருந்து தங்கள் பயிர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

Source : Dinamani

No comments:

Post a Comment