Friday, December 4, 2015

திருச்சி மாவட்டத்தில் பசுமை குடில் அமைத்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தகவல்




திருச்சி மாவட்டத்தில் பசுமை குடில் அமைத்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசுமை குடில்

தோட்டக்கலை துறை சார்பில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மலர் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட முறையில் பசுமை குடில் அமைத்து பயிர்களுக்கு தேவையான அளவில் அனைத்து சூழ்நிலையையும் உருவாக்கி கொடுத்து பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி உற்பத்தி செய்வதற்காக தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். பசுமை குடில் அமைப்பதன்மூலம் பருவம் அல்லாத நிலையிலும் தரமான மலர்கள் மற்றும் காய் கறிகளை உற்பத்தி செய்ய முடிகிறது. பசுமை குடில் அமைத்து பயிர் சாகுபடி செய்வதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையத்தில் ஒரு விவசாயி 2 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து செண்டு மல்லி, சாமந்தி சம்பங்கி ஆகிய மலர் செடிகளையும், வெங்காயம், காலி பிளவர், முலாம்பழம் ஆகியவற்றை ஊடுபயிராகவும் பயிரிட்டு உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் சிறு நாவலூர் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி 1000 சதுர அடி பரப்பளவில் பசுமை குடில் அமைத்து செண்டு மல்லி மற்றும் சாமந்தி பூ பயிரிட்டு உள்ளார்.

கலெக்டர் ஆய்வு

இந்த 2 இடங்களிலும் பசுமை குடில் அமைத்து நவீன தொழில் நுட்பத்துடன் மலர் சாகுபடி நடந்து வருவதை திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தமிழ் களஞ்சியம், உதவி இயக்குனர்கள் ரவிச்சந்திரன், செந்தில்ராணி ஆகியோர் பாதுகாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்வது பற்றி விளக்கி கூறினார்கள்.

திருச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 7 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 7 விவசாயிகளுக்கு மாவட்ட இயக்கக குழுவின் ஒப்புதல் படி பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. பசுமை குடில் அமைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.467 மானியம் வழங்கப்பட்டு வருவதால் ஆர்வம் உள்ள விவசாயிகள் நெல் தவிர மற்ற அனைத்து பயிர்களையும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாம் என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Source : Dailythanthi

No comments:

Post a Comment