Thursday, December 3, 2015

நெல் பயிரில் குலை நோய் தாக்குதல்: விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை


நெல் பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.
 தேவகோட்டை வட்டாரத்தில் வேளாண்மைத் துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வட்டார தொழில் நுட்பக் குழு மற்றும் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வட்டார தொழில் நுட்பக் குழுத் தலைவரும், வேளாண்மை உதவி இயக்குநருமான பாஸ்கரமணியன் தலைமை வகித்து பேசுகையில், தற்போது காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருக்கும் சூழ்நிலையில் நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதன் அறிகுறியானது இலைகளில் நீண்ட கண் வடிவ புள்ளிகள் கதிரின் கழுத்து பகுதி வரை காணப்படும். இவற்றின் தாக்குதல் அதிகமானால் பயிர் வளர்ச்சி குன்றுவதோடு கதிர் காய்ந்து ஒடிந்து விடும். மகசூலும் பாதிக்கப்படும்.
 எனவே அதிக தழைச்சத்து இடுவதை குறைக்க வேண்டும். தழைச்சத்து சரியான முறையில் பிரித்து இடுதல் வேண்டும். ட்ரைசைக்ளோசோல் 200 கிராம் அல்லது கார்பன்டைசிம் 100 கிராம் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
   தொடர்ந்து மப்பும் மந்தாரமுமான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் குறிப்பாக பிபிடி நெல் வயல்களில் முன் எச்சரிக்கையாக கண் வடிவ இலைப்புள்ளியை கண்டவுடனே தெளிப்பது நல்லது. மேலும் நெற்பயிரில் இலைசுருட்டுப் புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரமிட வேண்டும்.
  குளோர்பைரிபாஸ் 400 மி.லி. அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 10 கிலோ ஒரு ஏக்கருக்கு கலந்து தெளிக்கலாம். பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 15 கடைசி நாள். எனவே விவசாயிகள் பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என அவர் கூறினார்.
விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) வட்டார தொழில் நுட்ப மேலாளார் சூர்யா நடப்பாண்டில் செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்களை எடுத்துக் கூறி அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 மேலும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து வந்திருந்த விஞ்ஞானி விமலேந்திரன், தோட்டக்கலைத் துறை அலுவலர் சத்யா, துணை வேளாண்மை அலுவலர் ஒம்குமார், உதவி விதை அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சரவணன், பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment