பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விரும்பும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள், அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண்மைத் துணை இயக்குநர் (மாநில திட்டம்) மு. தங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், நவம்பர் 30ஆம் தேதி வரை 7 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபால், சிறுதானியம் 60 ஆயிரம் ஹெக்டேர், பயறு வகைகள் 25 ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
பயிர் விளைச்சல் போட்டி திட்டத்தில், நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, கம்பு, சோளம் ஆகிய பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பங்கேற்கலாம். நெல் மற்றும் நிலக்கடலை விவசாயிகள் மாநிலப் போட்டிக்கு ரூ. 100, மாவட்டப் போட்டிக்கு ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும். பிற பயிர்களுக்கு மாநிலப் போட்டிக்கு ரூ. 50, மாவட்டப் போட்டிக்கு ரூ. 25 பதிவு கட்டணமாகச் செல்லுத்த வேண்டும்.
மாநில அளவிலான போட்டிக்கு, வேளாண்மை இயக்குநர் (சென்னை) மூலம் தேர்வு செய்யப்படும் விவசாயப் பிரதிநிதி, இயக்குநர் அலுவலகப் பிரதிநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பிரதிநிதி, வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) ஆகியோர் கொண்ட குழுவினர், மகசூல் குறித்து ஆய்வு செய்வர்.
அதேபோல், மாவட்டப் போட்டிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பிரதிநிதி, வேளாண்மைத் துணை இயக்குநர் (மாநில திட்டம்), மாவட்ட ஆட்சியர் மூலம் பரிந்துரை செய்யப்படும் 3 விவசாயப் பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நடுவர்களாக நியமிக்கப்படுவர்.
50 சென்ட் நிலத்தில் அறுவடை செய்யப்படும் மகசூல் கணக்கிடப்பட்டு, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நெல் மற்றும் நிலக்கடலைக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ. 25 ஆயிரம், மாவட்ட அளவில் ரூ. 15 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். 2ஆம் பரிசாக மாநில அளவில் ரூ. 15 ஆயிரம், மாவட்ட அளவில் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.
பிற பயிர்களுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம் (மாநிலம்), ரூ. 10 ஆயிரம்(மாவட்டம்), 2ஆவது பரிசாக ரூ. 10 ஆயிரம் (மாநிலம்), ரூ. 5 ஆயிரம் (மாவட்டம்) வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள், போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
Source : Dinamani
No comments:
Post a Comment