காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த தும்பலஹள்ளி அணைக்கு, 10 ஆண்டுகளுக்கு பின், தற்போது நீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால், அணை பாசன விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், தும்பலஹள்ளி, வாணியாறு, தொப்பையாறு உட்பட, எட்டு அணைகள் உள்ளன. அதில், தும்பலஹள்ளி அணை தவிர, மற்ற, ஏழு அணைகளில், குறிப்பிடத்தக்க வகையில் ஆண்டு தோறும் தண்ணீர் வரத்து இருந்தது. ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக, தும்பலஹள்ளி அணை தண்ணீர் வரத்து இன்றி, வறண்டு காணப்பட்டது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், தும்பலஹள்ளி அணைக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகோல் புதூரில் இருந்து, தென்பெண்ணை ஆற்று உபரி நீரை, கால்வாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற, தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த, ஒரு மாதமாக பெய்து வரும் கன மழை காரணமாக, பஞ்சப்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் சின்னாற்றில் திறந்து விடப்பட்டது. மேலும், சின்னாற்றில் வரும் உபரி நீர், மழை நீர் காரணமாக ஜெர்தலாவ் உட்பட பல்வேறு ஏரிகள் நிரம்பி, அதில் இருந்து வரும் உபரி நீர், தற்போது, தும்பலஹள்ளி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, தும்பலஹள்ளி அணையில், 5 அடி அளவிற்கு தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்துள்ளதால், விரைவில் அணையில் முழு கொள்ளளவை எட்டும் என, விவசாயிகள், நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு பின், தும்பலஹள்ளி அணைக்கு தற்போது, தண்ணீர் வந்துள்ளது, விவசாயிகள், பொதுமக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
Source : Dinamalar
No comments:
Post a Comment