Monday, December 7, 2015

மாவட்டத்தில் காய்கறி விலை குறைந்தது சென்னையில் மழை தொடர்வதால்


பொள்ளாச்சி: சென்னையில் தொடரும் பலத்த மழை காரணமாக, கோவை மாவட்டத்தில் விளையும் காய்கறிகளின் விலை, கணிசமாக குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தென்னைகளுக்கு அடுத்தபடியாக, காய்கறிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக, பொதுமக்களின் வரவேற்புக்கு ஏற்ற நேரங்களில், விலை கிடைப்பதால் தக்காளி சாகுபடி மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கரில் நடக்கிறது.
குறிப்பாக, கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார், பொள்ளாச்சி பகுதிகளில் சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது. இதேபோல, மானாவாரி நிலங்களில் தட்டைப்பயிறும், பொரியல் தட்டையும் அதிகளவில் சாகுபடியாகிறது.

சொட்டு நீர் பாசனத்தில் பந்தல் காய்கறிகள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதற்காக பந்தல் காய்கறி உற்பத்தியாளர் சங்கமே நடக்கிறது. கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது.குறிப்பாக, சென்னை, கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையின் கோரதாண்டவம் மக்களின் வாழ்வாதாரத்தை பதைபதைக்க வைத்துள்ளது. இம்மழை இனியும் தொடரும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், நாச்சிபாளையம், கிணத்துக்கடவு மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் கோவை மட்டுமல்லாது மதுரை, சென்னை மற்றும் கேரளாவுக்கும் அனுப்பப்படுகிறது.தற்போது சென்னையில் அடைமழையுடன், வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் காய்கறிகள் அனுப்பப்படுவதில்லை. இதனால் உள்ளூர் வியாபாரிகளே எடுத்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போட்டிகள் குறைந்து போனதால், காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும், பொள்ளாச்சியில் இருந்து காய்கறிகள் சென்னைக்கு அனுப்பப்படுவதில்லை. மாறாக, இங்கிருந்து கேரளாவுக்கு தான் அனுப்பப்படுகிறது.இருந்தும், மார்க்கெட்டில் கடந்த வாரத்தை காட்டிலும் தக்காளி, 50 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 14 கிலோ எடையுள்ள ஒரு கூடை தக்காளி, தற்போது அதிகப்பட்சமாக, 350 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம் இது 400 ரூபாய்க்கு விற்றது. இதேபோல, வெண்டைக்காய், 40 ரூபாயில் இருந்து 27 ரூபாய்க்கும் புடலை, 30 ரூபாயில் இருந்து 25 ரூபாய்க்கும், பாகல், 35 ரூபாயில் இருந்து 30 ரூபாய்க்கும் நேற்று விற்பனையானது. அடுத்து வரும் நாட்களில் இதே விலை நீட்டிக்கும் அல்லது தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


Source : Dinamalar

No comments:

Post a Comment