ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த கடற்கரை கிராமம் நொச்சியூரணி. இங்கு 500 குடும்பங்கள் உள்ளன. கடலை ஒட்டிய கிராமம் என்றாலும் உப்பு தண்ணீராக இல்லாமல், 20 அடி ஆழத்திலேயே நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல வீடுகளில் வீட்டை ஒட்டிய பகுதிகளில் மல்லிகை சாகுபடி செய்து வருவாய் ஈட்டுகின்றனர். கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் சுமார் 60 ஏக்கரில், மணக்கும் மண்டபம் மல்லிகை சாகுபடி செய்துள்ளனர். இதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டுகின்றனர்.
மல்லிகை விவசாயி எஸ்.முத்து கூறியதாவது: மல்லிகை சாகுபடியில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். நான் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். தற்போது, கிலோ மல்லிகை பூ ரூ.200 வரை விலை கிடைக்கிறது. ஒரு ஏக்கர் மல்லிகையில் தினமும் 20 முதல் 25 கிலோ மல்லிகை பூ கிடைக்கும். கடல் 100 மீட்டரில் இருந்தாலும் 20 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. மோட்டார் வைத்து மல்லிகைக்கு தண்ணீர் பாய்ச்சுகிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் மல்லிகை பூ, ராமநாதபுரம், மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மல்லிகை பதியம் வைப்பதிலும் எங்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. பெரிய செடியில் இருந்து கிளைகளை வெட்டி, பதியம் போடுவோம். 1000 செடிகள் ரூ.1500 என்ற விலையில், அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பதியம் வைத்த மல்லிகை செடிகளை வாங்கிச்செல்கின்றனர்.
கடலில் சோழவ காற்று எனப்படும் உப்புக்காற்று வீசும் சீசனில் மூன்று மாதங்களுக்கு மலர் விளைச்சல் இருக்காது. அந்த காலங்களில் மீன்பிடி தொழிலில் அதிகமாக ஈடுபடுவோம் என்றார். தொடர்புக்கு 97866 50985
- எஸ்.பழனிச்சாமி, ராமநாதபுரம்
source : dinamalar
.
.
No comments:
Post a Comment