விளைச்சலை அதிகரிக்க விதைகளை உரிய பரிசோதனைக்கு பிறகே பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து விதைச் சான்று பரிசோதனை அலுவலர் சு.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்தி:
வேளாண்மைத் துறையின் வளர்ச்சியில் விதை முக்கியப்பங்கு வகுக்கிறது. நல்ல மரபுப் பண்புகளோடு, புறத் தூய்மை, நல்ல முளைப்புத்திறன், குறிப்பிட்ட அளவு ஈரத்தன்மை மற்றும் பூச்சி, நோய் தாக்கப்படாத விதைகளே நல்ல விதைகள் ஆகும்.
விதைப் பரிசோதனை நிலையங்கள், சான்று விதை, ஆய்வாளர் விதை மற்றும் பணி விதை என மூன்று மாதிரிகளை அளிக்கின்றன. இதில், சான்று விதைகள் வயல் தரத்தில் தேர்வு பெற்று அறுவடை செய்யப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்ட பின் விதைச் சான்று அலுவலர்களால் மாதிரி எடுத்து விதைத் தரம் காண அனுப்பப்படும்.
விதைப் பரிசோதனை நிலையத்தில் மாதிரிகள் பெறப்பட்டவுடன் விதைகளின் புறத்தூய்மை, பிற ரகக் கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவை முதலில் பரிசோதனை செய்யப்படும். புறத்தூய்மை பரிசோதனைக்குப் பிறகு முளைப்புத் திறன் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும்.
இதில், ஒவ்வொரு விதைக்கும் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் முளைப்புத் திறன் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்பு விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரகக் கலப்பு ஆகியவற்றின் முடிவறிக்கை அறிவிக்கப்படும்.
விதைப் பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரி பெறப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் அறிவிக்க அதிகபட்சம் 30 நாள்கள் வரை தேவைப்படும். எனவே விவசாயிகள் தங்களின் விதைகளை உரிய பரிசோதனை செய்து தரத்தை அறிந்து விதைப்பை மேற்கொள்ள வேண்டும். மேலும், விதைகளை நடப்பு பருவத்திற்கு முன்பே அனுப்பித் தரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு விதை மாதிரியைப் பரிசோதனை செய்ய அரசு அதிகம் செலவிடுகிறது. ஆனால், விவசாயிகளின் நலன் கருதி மிகக் குறைந்த கட்டணமாக ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
எனவே விதைகளை உரிய பரிசோதனைக்குப் பிறகு நடவு செய்து விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment