மா, பலா விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை ஹாப்காம்ஸ் சார்பில் மா, பலா சிறப்பு விற்பனையைத் தொடக்கி வைத்து அவர் பேசியது: சர்வதேச அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் 600 வகையான மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்தியாவில் 15 வகையான மாம்பழங்கள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. கர்நாடகத்தில் கோலார் மாவட்டம் சீனிவாசபுரா மாம்பழ விளைச்சலுக்குப் பெயர் பெற்றுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக மா, பலா பழங்களை வாங்கி விற்பனை செய்யும் பணியினை ஹாப்காம்ஸ் செய்து வருகிறது. இது வரவேற்கத்தகது. கடந்த ஆண்டு கர்நாடகத்தில் ஹாப்காம்ஸ் மூலம் 577 டன் மாம்பழமும், 70 டன் பலாப்பழமும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டில் 1 ஆயிரம் டன் மாம்பழமும், 200 டன் பலாப்பழமும் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு விவசாயிகளின் நலனுக்குத் தேவையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மா, பலா விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதை விவசாயிகள் பெற்று பலனடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஹாப்காம்ஸ் தலைவர் ஜே.ஆர்.சீனிவாசன், மேலாண் இயக்குநர் பெல்லூர் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
source : Dinamani
No comments:
Post a Comment