Monday, May 16, 2016

விதை பரிசோதனை செய்து மகசூல் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்து அதன் தரத்திற்கேற்ப விதைத்தால் நல்ல விளைச்சல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லாவண்யா ஜெயசுதா கூறியிருப்பதாவது: ஊட்டி ரோஜா பூங்கா அருகே தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் விதை பரிசோதனை  பரிசோதனை நிலையத்தில் மாவட்டத்தில் விளைய கூடிய கேரட், பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி, டர்னிப், கோதுமை, பாலக் கீரை போன்ற விதைகளில் முளைப்புத்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

விதைபரிசோதனை நிலையத்தில் இரண்டு வகையான மாதிாிகள் பெறப்படுகின்றன. விதை ஆய்வாளர் மூலம் விற்பனை நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் ஆய்வாளர் விதை மாதிரிகள், விதை விற்பனையாளர் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பணி விதை மாதிரிகள் ஆகும். 

 பணி விதை மாதிரிகள் பரிசோதனைக்கு ரூ.30 செலுத்த வேண்டும். கேரட் மற்றும் பீட்ரூட் விதைகளின் முளைப்புத்திறன் 60 சதவீதம் காணப்பட்டால் தரமான விதையாகும். பரிசோதனை முடிவுகள் 7 முதல் 14 நாட்களுக்குள் அளிக்கப்படும். பீன்ஸ் மற்றும் பட்டானி விதைகளின் முளைப்புதிறன் 75 சதவீதம் காணப்பட வேண்டும். பரிசோதனை முடிவுகள் 5 முதல் 9 நாட்களுக்குள் அளிக்கப்படும். நூல்கோல், முள்ளங்கி, முட்டைகோஸ் விதைகளின் முளைப்பு திறன் 70 சதவீதமாகவும், காலிபிளவரில் 65 சதவீதமும் முளைப்பு திறன் காணப்பட வேண்டும். பரிசோதனை முடிவுகள் 4 முதல் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும். எனவே விதைகளின் தரம் அறிந்து பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு வேளாண் அலுவலர் லாவண்யா ஜெயசுதா தொிவித்துள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment