Thursday, May 26, 2016

விவசாயிகள் நவீன வேளாண் முறையைப் பின்பற்ற வேண்டும்


விவசாயிகள் நவீன வேளாண் முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கெüடா தெரிவித்தார்.
பெங்களூரு, சேஷாத்திரி சாலையில் அமைந்துள்ள வேளாண் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை வேளாண் துறையின் அனைத்து மாவட்ட இணை இயக்குநர்களுடன் காணொலிக் காட்சிமூலம் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: கர்நாடகம் மட்டுமல்லாது, இந்தியாவின் விவசாயிகள் அனைவரும் சோதனையான காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள். விவசாயத்திற்கு தரமான விதை, உரம் கிடைப்பதில் இருந்து, பயிரிட்டு, அறுவடை செய்வது வரை விவசாயிகள் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அறுவடைக்குப் பிறகு விளைச்சலுக்கு செலவழித்த பணத்தை எடுக்க இயலாத பரிதாப நிலை நீடித்துவருகிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான சவால்கள், இன்னல்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலமே தீர்வுகாண முடியும் என்பதை அதிகாரிகள் உணர்ந்து, அதை விவசாயிகளிடம் எடுத்துக்கூற வேண்டும். வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் துறைக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது.
அதேபோல, வேளாண் துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையேயும் இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில் வேளாண் துறையினர் விவசாயிகளை நாடிச் செல்ல வேண்டும். வேளாண் துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்திருந்தாலும், அவை விவசாயிகளைச் சென்றடையவில்லை என்பது வேதனையான உண்மை. அறிவியலுக்கு எதிரான வேளாண் முறையை விவசாயிகள் கைவிட வேண்டும். மேலும் விவசாயிகள் நவீன அறிவியல் கருவிகள், கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். வேளாண்மையில் நிகழ்ந்துவரும் நவீன அறிவியல் மாற்றங்களை விவசாயிகளிடம் கொண்டுசெல்ல வேளாண்மை முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தைச் செம்மையாக செயல்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும். இந்த முகாமில் மாநில அரசின் வேளாண் திட்டங்கள் தவிர, வேளாண் கருவிகள், புதிய கண்டுபிடிப்புகள், மண்வளப் பாதுகாப்பு குறித்த தகவல்களும் அளிக்கப்படும். இந்த முகாமில் வேளாண் துறை தவிர தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ப்பு, மீன் வளம், கூட்டுறவுத் துறைகளும் கலந்து கொள்கின்றன. அதேபோல, கிருஷிபாக்கியா எனப்படும் வேளாண் மேம்பாட்டு திட்டத்தையும் திறம்படச் செயல்படுத்த வேண்டும். இதுதவிர, விதைத் திருவிழாவையும் நடத்தி விவசாயிகளே விதைகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர். இக் கூட்டத்தில் வேளாண் துறை ஆணையர் பாண்டுரங்க பி.நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

source; dinamani

No comments:

Post a Comment