உதகையின் பிரதான மலர்த் திருவிழாவான மலர்க் காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
3 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தொடங்கி வைக்கிறார்.
உதகையில் ஆண்டுதோறும் அரசினர் தாவரவியல் பூங்காவில் மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மலர்க் காட்சி நடைபெறும். ஆனால், இவ்வாண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடவடிக்கைகளின் காரணமாக மலர்க் காட்சி மே மாதத்தின் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலையில் இக்கண்காட்சியை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தொடங்கி வைக்கிறார். மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளர் விஜயகுமார், தோட்டக்கலைத் துறை இயக்குநர் சித்திரசேனன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த மலர்க் காட்சிக்காக பூங்காவில் பல்வேறு மலர்களாலான வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பிடத்தக்க அம்சமாக ஒரு லட்சம் காரனேஷன் மலர்களைக் கொண்டு மணிகூண்டுடன் கூடிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்புறத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 68 அடி உயரத்திலும், 30 அடி அகலத்திலும் இந்த மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, சுமார் 10,000 காரனேஷன் மலர்களைக் கொண்டு இரட்டைக்குருவி உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் துலிப், கிரசாந்திமம், பிண்டுஷன் போன்ற வெளிநாட்டு மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் நெதர்லாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் விளையும் கொய் மலர்களான ஜெர்பரா, காரனேஷன், லில்லியம் மற்றும் கிரசாந்திமம் போன்ற மலர்களும் காட்சி மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. காட்சி மாடத்தில் மட்டும் 15,000 மலர்த்தொட்டிகளும், புது பூங்காவில் 6,000 மலர்த் தொட்டிகளும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பூங்காவின் முன்புற வாயிலிலிருந்து மலர்க் காட்சி அரங்கு வரை 10 இடங்களில் மலர் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் நுழைவுக் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பை தோட்டக் கலைத் துறையினரே மேற்கொண்டுள்ளனர். பெரியவர்களுக்கு ரூ. 30-ம், சிறியவர்களுக்கு ரூ. 15-ம், கேமராவிற்கு ரூ. 50-ம், விடியோ கேமராவிற்கு ரூ. 100-ம் கட்டணங்களாகும். பூங்காவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க்காட்சியை கண்டுகளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலர்க் காட்சியையொட்டி பூங்காவைச் சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 3 நாள்களிலும் பூங்காவிற்குள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி அரங்கு:
உதகை மலர்க் காட்சியில் முதன்முறையாக தினமணியின் சார்பில் காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் கடந்த 80 ஆண்டுகளில் தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைளில் முதல் பக்கத்தில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. அதேபோல, தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளின் இதர வெளியீடுகள் தொடர்பான விவரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Source : dinamani
No comments:
Post a Comment