காஞ்சீபுரம்
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் 25–ந் தேதிக்குள் கொள்முதல் செய்யப்படும் என்று கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
நெல் கொள்முதல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2015–16 காரீப் பருவ காலத்தில், அதிக அளவிலான பருவ மழை பெய்ததன் காரணமாக, நெல் விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறந்திட கோரி கோரிக்கைகள் வரப்பெற்றன.
அதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் 68 நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் 14 துணை கொள்முதல் நிலையங்கள் என்று மொத்தம் 82 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 22–ந் தேதி முதல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆய்வுக்கூட்டங்கள்
மேலும், நெல் கொள்முதலை ஒழுங்குப்படுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் மார்ச் மாதம் 21, 30, ஏப்ரல் 6, 13 ஆகிய தேதிகளில் வேளாண்மைத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, நெல் கொள்முதலை விரைந்து மேற்கொள்ள தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதன் பயனாக, கடந்த பிப்ரவரி மாதம் 22–ந் தேதி முதல் மே மாதம் 9–ந் தேதி வரை 22 ஆயிரத்து 282 விவசாயிகளிடம் இருந்து 46,950.520 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 29–ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்காக விவசாயிகளுக்கு ரூ.53.99 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
சேமிப்பு மையங்கள்
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லினை வேடப்பாளையம் மற்றும் வி.வி.நல்லூர் திறந்த வெளி சேமிப்பு மையங்கள், வேடப்பாளையம், காஞ்சீபுரம் சேமிப்பு கிடங்குகள் மற்றும் திம்மாவரம் நவீன அரிசி ஆலை போன்ற இடங்களில் சேமிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து வைத்துள்ள 21,918 டன் மெட்ரிக் நெல் வருகிற 25–ந் தேதிக்குள் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகள் மழையால் நனையாமல் தடுக்க முன்னேற்பாடாக கருப்பு நிற பாலித்தீன் கவர் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dailythanthi
No comments:
Post a Comment