புதுடெல்லி,
‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ என்பதை ஊக்கப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு விவசாயிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக கோரிக்கை விடுத்து உள்ளனர்.
”மேக் இன் இந்தியா” என்ற திட்டத்தின் வரிசையில் ‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ திட்டத்தையும் ஊக்கப்படுத்துங்கள் என்று வயல்வெளியில் பயிர்கள் மூலம் மோடியின் உருவத்தை வடிவமைத்து கோரிக்கையை முன்வைத்து உள்ளனர். பிரதமர் மோடி இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட செய்வதற்காக வேண்டுகோள் விடுக்கவேண்டும் என வலியுறுத்தி பரத்சிங்கா என்ற கிராமத்தில் ஓவியத்தை விவசாயிகள் வடிவமைத்துள்ளனர். பிரதமர் மோடியின் உருவப்படம் கொண்ட இந்த ஓவியம் 7,200 சதுர அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாயி ஸ்வேதா பட்டாத் பேசுகையில் “பேனா முனைக்கு இருக்கும் வலிமை கலைக்கும் உள்ளது. பிரதமர் மோடி மேக்-இன்-இந்தியா திட்டத்தை வலியுறுத்திப் பேசி வருகிறார். அவர், இந்தியாவில் பயிர் செய்வோம் திட்ட பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இப்போதைய நாட்களில் விவசாயிகள் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர் மற்றும் இளைஞர்கள் விவசாயிகளாக விரும்புவதில்லை. எனவே, அவர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றுகூறிஉள்ளார்.
விவசாயிகளும், ஓவியர்களும் ஒன்றாக சேர்ந்து சுமார் மூன்று மாதங்களாக உழைத்து இந்த உருவப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஓவியத்தில், ‘டியர் பிரதமர், தயவு செய்து இந்தியாவில் விளை விப்போம்’ என்ற வாக்கியத்தையும் அவர்கள் அமைத்துள்ளனர். பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிஉள்ள விவசாயிகள், உள்நாட்டு பாரம்பரிய விதைகள் கிடைக்காதது மற்றும் பூச்சிக் கொல்லி தட்டுப்பாடு மற்றும் இயற்கை விவசாயத்தின் தேவை குறித்தான விளக்கங்களை வெளிப்படுத்திஉள்ளனர்.
“கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உள்நாட்டு பாரம்பரிய விதைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயி வசந்த் கூறிஉள்ளார். பிரதமர் மோடியின் ஓவியம் பயிரால் 7,200 சதுர அடியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது பலரை ஈர்த்து வருகிறது. அதிகபேர் சென்று பார்த்து வருகின்றனர். பிரதமர் மோடியும் இதனை கவனிப்பார், விவசாயத்தை லாபகரமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Source : Dailythanthi
No comments:
Post a Comment