கோடைகாலத்தில் ஏற்படும் சோர்வு, உடல் உஷ்ணத்தை போக்கும் மாம்பழத்தை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு தயாரிக்கலாம். மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு அரைத்து எடுக்கவும். இதனுடன் ஏலக்காய் தட்டி போடவும். சிறிது சுக்குப் பொடி, நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.
இதை நன்றாக கலந்து குளிரவைத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடைகாலத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சோர்வு ஏற்படும். மாம்பழம் சோர்வை நீக்குகிறது. மாம்பழம் சத்தூட்டமான உணவாக விளங்குகிறது. அதிகம் சாப்பிட்டால் உஷ்ணம் ஏற்படும் என்பதால் சுக்கு, நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் ஆரோக்கியமான உணவாக அமைகிறது.
செம்பருத்தி பூக்களை பயன்படுத்தி சோர்வை நீக்கும் பானம் தயாரிக்கலாம். செம்பருத்தி பூக்களின் இதழ்களை வெந்நீரில் அலசி அரைத்து எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டியபின், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்க்கவும். இது, குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வை நீக்கும். செம்பருத்தியை தேனீராக்கி அன்றாடம் குடிப்பதால் இதயம் பலப்படும். மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
இதய அடைப்பை போக்குகிறது. ரோஜா பூவை பயன்படுத்தி வயிற்று பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். புளிப்பில்லாத தயிரை அரைத்து எடுக்கவும். இதனுடன், பன்னீர் ரோஜா இதழ்களுடன் பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து எடுக்கப்பட்ட பசையை சேர்க்கவும். நன்றாக கலந்து குளிர வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது, சோர்வை நீக்குவதுடன், வயிற்றுபோக்கு பிரச்னையை தடுக்கும் மருந்தாகிறது. இதயத்தை பலப்படுத்துகிறது. குளிர்ச்சியை தரும். ரோஜா அற்புதமான மருந்தாகிறது. இதன் மணம் புத்துணர்வை தருகிறது.
சந்தனத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வு, உஷ்ணத்தை தணிக்கும் பானம் தயாரிக்கலாம். பனங்கற்கண்டை நீர்விட்டு கரைத்து எடுக்கவும். இந்த கரைசலை கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து சந்தனப்பொடி சேர்த்து கலக்கவும். பாகு பதத்தில் வந்தவுடன் ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
தேவையானபோது நீர்விட்டு கலந்து கொடுக்கலாம். இதனால் உடல் உஷ்ணம் தணியும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதயத்துக்கு பலத்தை கொடுக்கிறது. வெயில் காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால் ரத்த அழுத்த குறைபாடு ஏற்படும். இந்நிலையில், சந்தனம் ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது.
Source : Dinakaran
No comments:
Post a Comment