கோடைகாலத்தில் நாம் எதிர்கொள்ளும் உடல் உஷ்ணம், கண் எரிச்சல் பிரச்னைகளை தீர்க்கும் மண் பாண்டங்கள் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. நீரை சேமிக்க, சமையல் செய்வதற்கு மண் பாத்திரங்கள் பயன்படுகிறது. இன்றைய அவசர உலகத்தில் பலவகை உணவுகளை எடுத்துக்கொள்வதால் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மண்பானை சமையல் அமிலத்தன்மையை போக்குகிறது.
மண் பாத்திரங்கள் வாங்கினால், அதை 7 நாட்கள் நீரில் ஊறவைத்த பின் பயன்படுத்த வேண்டும். இதனால் மண்துகள்கள் இல்லாமல் போகும். உணவில் மண் கலக்காமல் இருக்கும்.கோடைகாலத்தில் அதிக உஷ்ணத்தால் கண் எரிச்சல், கண் சிவந்து போகுதல் போன்றவை ஏற்படும். மண் பாத்திரத்தை பயன்படுத்தி இப்பிரச்னைகளை போக்கும் முறைகளை காண்போம்.
மண் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வில்வ இலைகளை சுத்தப்படுத்தி மண்பாத்திரத்தில் சுமார் 4 மணி நேரம் வரை ஊறவைக்கவும். பின்னர், வில்வ இலைகளை எடுத்துவிட்டு தண்ணீரில் கண்களை கழுவினால் கண் எரிச்சல் சரியாகும். கண்கள் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும்.கோடைகாலத்தில் கண் எரிச்சல் என்பது தவிர்க்க முடியாதது. காற்றினால் பரவும் கிருமிகள் கண்களை பாதிக்கும். இப்பிரச்னைக்கு வில்வ இலை மருந்தாகிறது.
வெட்டிவேரை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர் செய்முறை குறித்து பார்க்கலாம். வெட்டி வேரை நன்றாக சுத்தப்படுத்தி எடுக்கவும். வெட்டிவேரை மண்பானை தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். இந்த தண்ணீரை குடித்துவர வயிற்றுவலி சரியாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து வருவது குணமாகும். சிறுநீர் பாதைக்கு குளிர்ச்சி தரும். உடல் உஷ்ணம் குறையும்.
தாமரை இதழை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் முறை குறித்து பார்க்கலாம். மண்பானையில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இதில் தாமரை இதழ்களை போட்டு இரவு முழுவதும் வைத்து தண்ணீரை குடித்துவர உடல் சோர்வு நீங்கும். அற்புதமான மருந்தாக விளங்கும் தாமரை இதழ் இதயத்தை பலப்படுத்தும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர் ஆகாரம் செய்யும்முறை குறித்து பார்க்கலாம்.
ஊறவைத்த பழைய சாதத்தை மண்பாத்திரத்தில் எடுக்கவும். இதனுடன் பசுவின் தயிர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, நறுக்கிய பச்சை வெங்காயம், சிறிது பச்சை மிளகாய் சேர்த்து நீர்விட்டு நன்றாக கரைக்கவும். கோடைகாலத்தில் இதை சாப்பிட்டுவர நீர் இழப்பு சமன்படுகிறது. புத்துணர்வு ஏற்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அல்சர் இருப்பவர்கள் மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது நல்லது.
source : Dinakaran
No comments:
Post a Comment