திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழையைப் பயன்படுத்தி இடைஉழவு மேற்கொள்ள, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டத்தில் 2 மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தநிலையில், சில நாள்களாக கோடைமழை பெய்து வருகிறது. இம்மழையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள, வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கோடை மழையைப் பயன்படுத்தி பழமரத் தோப்புகளில் இடைஉழவு மேற்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை விவசாயிகள் பெற முடியும். மழைநீர் வழிந்தோடி வீணாகாமல் தடுத்து மண்ணுக்குள் இறக்கி மழைநீரைச் சேமிக்க உதவும்.
இதற்கு ஏதுவாக நாம் சரிவுக்கு குறுக்காக உழவு மேற்கொள்ள வேண்டும். மண் நன்கு பொலபொலப்பாகி மண்ணின் தன்மை மேம்படுகிறது. இடைஉழவு மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. களைகள் பூத்து விதைகள் பரவும் முன்பே கோடையில் அழிக்கப்படுவதால் பருவகாலத்தில் களைகளின் தாக்கம் வெகுவாகக் குறையும்.
பல்வேறு பூச்சிகள், நோய்க் கிருமிகளுக்கு களைகளே மாற்று உணவாகவும், மாற்று இருப்பிடமாகவும் உள்ளதால் பூச்சிநோய்த் தாக்குதலும் வெகுவாகக் குறையும். மண்ணில் மறைந்துள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், நோய்க் கிருமிகள் கோடை உழவால் வெளிப்படுத்தப்பட்டு அழிக்கப்படுவதால் அதனாலும் பூச்சிநோய்த் தாக்குதல் வெகுவாகக் குறையும்.
எனவே, கோடை மழையைப் பயன்படுத்திப் பழமரச் சாகுபடியாளர்கள் பழமரத் தோப்புகளில் இடைஉழவாகவும், இதர சாகுபடியாளர்கள் கோடை உழவாகவும் உழுது பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment