நட்ஸ் நல்லது என்கிறார்கள் சிலர். எல்லா வகையான நட்ஸும் நல்லவையல்ல என்கிறார்கள் வேறு சிலர். இதனால் நட்ஸ் நல்லதா, கெட்டதா என்கிற குழப்பத்தில் அதைத் தவிர்க்கிறவர்களே அதிகம். நட்ஸின் முக்கியத்துவம், எடுத்துக் கொள்ளவேண்டிய அளவு மற்றும் முறைகளைப் பற்றி விளக்குகிறார் உணவியல் நிபுணர் டாக்டர் கோமதி கௌதம்.
“நட்ஸ் வகைகளான பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றில் மீன்களில் இருப்பது போல் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இதயத்தை பாதுகாப்பதோடு, சருமத்தின் அழகை பராமரிக்கவும், ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு, இதய நோய் போன்றவற்றை வராமல் தடுக்க முடியும். இவற்றில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் சருமப் பொலிவை அதிகப்படுத்தி இளமையைத் தக்க வைக்கும்.
வால்நட்ஸில் மன அழுத்தத்தை விரட்டும் ஆல்பா லினோலினிக் அமிலம் உள்ளது. பணியிடத்தில் வேலைப்பளு அதிகம் உள்ளவர்களும் மன அழுத்தம் உள்ளவர்களும் வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காமா டோகோபெரால் என்னும் கெமிக்கல் பிஸ்தாவில் அதிக அளவில் இருப்பதால், அதை உணவில் சேர்த்து வரும்போது அந்த ஆபத்திலிருந்து விலகி இருக்கலாம்.
பாதாம், வால்நட் மற்றும் பிஸ்தா போன்றவற்றில் நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்திருப்பதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் இதயம் ஆரோக்கியமடையும். எனவே, அதிகப்படியான கொலஸ்ட்ரால் தேவைப்படுபவர்கள் இவற்றை சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் பாதாம், பிஸ்தா சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மூளையில் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன் நரம்பு மண்டலத்தை பாதுகாத்து, ஞாபக மறதி வராமல் தடுக்கும்.
எடைகுறைவாக வலுவிழந்து இருப்பவர்கள், எப்போதுமே சோர்ந்து காணப்படுவார்கள். இவர்கள் தினமும் காலையில் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிட்டு வரும்போது உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள முடியும். உடலுக்குத் தேவையான எனர்ஜியை கொடுப்பது நட்ஸின் விசேஷம். பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த நட்ஸை தொடர்ந்து எடுத்து வரும்போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்” என்று சொல்லும் மருத்துவர் நட்ஸை எடுத்துக் கொள்ளும் முறைகளையும் விளக்குகிறார்.
“நட்ஸில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் அதை முறையாக சாப்பிடவேண்டும். இப்போது கடைகளில், உப்பு, காரம் போட்ட முந்திரி மற்றும் வேர்க்கடலை, உப்பு கலந்த பிஸ்தா போன்றவற்றை விற்கிறார்கள். இவற்றை ரத்த அழுத்தம் உள்ளவர்களும், உடலில் உப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. பாதாம், பிஸ்தாவைவிட முந்திரியில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருப்பதால் அதை குறைவாக சாப்பிடுவது நல்லது.
ஏழைகளின் நண்பன் என்று சொல்லப்படும் வேர்க்கடலையில் அனைத்து நன்மைகளும் இருந்தாலும் உடல்பருமன் அதிகம் உள்ளவர்கள் வேர்க்கடலையை 30 கிராம் அளவிற்கு மிகாமல் சாப்பிடுவது நல்லது. அதேபோல முந்திரியை அதிக சூட்டில் நெய்யில் வறுத்து சாப்பிடுவதும் தவறு. `அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! எனவே தேவைக்கு அதிகமாக நட்ஸை எடுத்துக் கொண்டால் மூன்று மடங்கு கலோரிகள் அதிகமாகிவிடும்” என்று எச்சரிக்கிறார்.
Source : Dinakaran
No comments:
Post a Comment