Monday, February 15, 2016

நெற்பயிரில் இலைக்கருகல் நோய் கட்டுப்படுத்த அறிவுரை

நெற்பயிரில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சபாநடேசன், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் பர்கூர் வட்டாரங்களில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் பரவலாக தென்படுகிறது. தீவர தாக்குதல் ஏற்படும் போது 60 சதம் வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும். தாக்குதல் காணப்படும் நெற்பயிரின் இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்ற மஞ்சள் நிற வரிகளுடன் இலைகள் காய்ந்து, பின் சுருண்டும் இலை நடு நரம்பு பழுதடையாமல் காணப்படும். அதிகாலை நேரங்களில் இளம்புள்ளிகளின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும். தீவிர தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்துவிடும். நோய் தாங்கும் திறனுள்ள ரகங்களை பயிரிடுதல் மற்றும் நோயற்ற விதைகளை பயன்படுத்துதல் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பயிரை காத்துக்கொள்ளலாம். மேலும் பயிர் நடவு செய்யும் போது, நாற்றுக்கள் கத்தரிக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மிகுதியான தழைச்சத்து அளிப்பதை தவிர்க்க வேண்டும். வயலில் நீர் தேங்கி நிற்காமல் வடிகட்ட வேண்டும். நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அத்துடன் நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் காணப்பட்டால் 3 சதம் வேப்ப எண்ணெய் அல்லது 5 சதம் வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றை தெளிக்கலாம். மேலும் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்லின் கலவை 300 கிராமுடன், காப்பர் ஆக்சிக்குளோரைடு 1.25 கிலோ/எக்டர் கலந்து தெளிக்க வேண்டும். தாக்குதல் மீண்டும் காணப்பட்டால் 15 நாட்களுக்கு பின் ஒரு முறை இக்கலவையை தெளித்து தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Source : Dinakaran

No comments:

Post a Comment