Sunday, February 28, 2016

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க இலக்கு: பிரதமர் மோடி


வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் விவசாயத் துறையில் திட்டங்களை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
 உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
 விவசாயிகளின் நலனுக்காக, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டம், அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாகும். வேளாண் சமூகத்தினரின் நலனைக் காப்பதற்கான புதிய முயற்சியாக, வரும் ஏப்ரல் மாதம், "இணையதள வேளாண் சந்தை' தொடங்கப்படவுள்ளது. அந்த இணையதளம் வழியாக, நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்ய முடியும்.
 விவசாயிகளுக்கு தற்போது சில சவால்கள் உள்ளன. அந்தச் சவால்களை வாய்ப்புகளாக மாற்றிவிட முடியும். 
 மத்திய அரசின் திட்டங்களை முறையாக அமல்படுத்தும் சில மாநிலங்களில் விவசாயத் துறையில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால், சில மாநில அரசுகள் வேளாண் திட்டங்களை கண்டுகொள்ளாமல் உள்ளன. "இந்தத் திட்டங்களை தேர்தல் நெருங்கும் சமயத்தில் அமல்படுத்தலாம்' என்ற எண்ணத்தில் சில மாநில அரசுகள் உள்ளன. அதன்பிறகு விவசாயிகளின் தலைவிதியை கடவுள்தான் தீர்மானிப்பார்.
 எனவே, நாடு சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டைக் கொண்டாடவுள்ள, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். அதற்காக, அனைத்து மாநில அரசுகளும் வேளாண் துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 இதில், மாநில அரசுகளின் விமர்சனத்துக்கு இடமில்லை. விவசாயிகளின் திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுடன் தோளோடுதோள் கொடுத்து பாடுபடுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
 விவசாயம், உற்பத்தித் துறை, சேவைத் துறை ஆகிய மூன்றும், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. எனவே, வேளாண் துறையை அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக மேம்படுத்த வேண்டும்.
 உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியின் குறுக்கே 5 நதிகள் பாய்ந்தாலும், அங்கு வறட்சி நிலவுவது வெட்கக்கேடான விஷயமாகும்.
 அதேநேரத்தில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம், 10 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ச்சிப் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால், முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில், தொடர்ச்சியாக கடந்த 3 ஆண்டுகளாக, விவசாயத்தில் அந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
 விவசாயத் துறையில் நெல், கரும்பு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை பயிரிடுவது, கோழிப் பண்ணை, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகியவற்றுக்கான பண்ணைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனப்பரப்பை அதிகரிக்கச் செய்வது ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், பருவ நிலை ஏமாற்றினால் கூட விவசாயிகளுக்குப் பாதிப்பு நேரிடாது.
 விவசாயத் துறையில், நீரைப் பயன்படுத்துவதில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால், விவசாயிகளின் பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும். அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். அதற்காக, நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
 விவசாயிகளைப் பற்றிய எனது கனவு நிச்சயம் நனவாகும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார் பிரதமர் மோடி.
 வாரம் 200 கிராமங்களில் மின்வசதி: இதனிடையே, ஒவ்வொரு வாரமும் மின்வசதி இல்லாத 200 கிராமங்களுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் செயல்பட வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

Source : Dinamani

No comments:

Post a Comment