Sunday, February 14, 2016

மரங்களை வளர்ப்போம்... "மாசு' வை தவிர்ப்போம்...


சுகாதாரமான காற்று, தூசியில்லா நகரம், தூய்மையான சுற்றுபுறத்தைதான் இன்று பலரும் விரும்பு கின்றனர். அதன்பயன்பாடே சிறிது சிறிதாக தாங்கள் வசித்து வரும் பகுதியை தூய்மையாகவும், மரங்கள், செடிகள் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் முதல் படியாக வீடுகளில் காலி பகுதிகளில் பயனுள்ள மற்றும் மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்க்க துவங்கி உள்ளனர். பொது நல அமைப்பினரோ நீர்நிலைகளின் கரை பகுதியில் மரங்களை வளர்க்க ஏற்பாடு செய்கின்றனர். இதுபோன்று அருப்புக்கோட்டை கஞ்சமநாயக்கன்பட்டியை சேர்ந்த மின் பொருட்கள் விற்கும் கடை <உரிமையாளரான ஜவஹர் , தன் வாழ்க்கையில் எவ்வளவு முடியுமோ அத்தனை மரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார்.
ஆண்டுக்கு 400 மரங்கள்
இயற்கை ஆர்வலரான இவர் மரங்களின் பாதுகாவலனாகவும் விளங்கி வருகிறார். ஆண்டுக்கு 200 முதல் 400 மரங்கள் வரை நட்டு பராமரித்து வருகிறார். தனது கிராமத்தில் உள்ள 15 ஏக்கர் பெருமாள் கோயில் ஊரணியை சுற்றி "பென்சிங்' அமைத்து சுற்றிலும் மரக் கன்றுகளை நட்டுள்ளார். அரசு அலுவலக வளாகம் , பள்ளிகள் மற்றும் கிராம பொது இடங்கள், ரோட்டோரம் என காலி இடங்கள் எவ்வளவு இருந்தாலும் அங்கு மரக்கன்றுகளை நடுகிறார். தும்பகுளம் கண்மாயை கரையை அகலப்படுத்தி அதன் கரையை யொட்டி மரங்களை வளர்த்துள்ளார். கோயில் நிகழ்ச்சிகள், கும்பாபிஷேகங்கள் எது நடந்தாலும் அரச மரக் கன்றுகளை வழங்கி அதை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்.

பன்னீர் பூ :இயற்கை உரங்களையே பயன்படுத்தும் இவர் ,வீட்டில் தென்னை, வேம்பு, மூலிகை மரங்கள், பன்னீர் பூ, மகிழம் பூ, சந்தன மரம், பாக்கு மரம், மனோரஞ்சிதம், பலா மரம், ஸ்டார் புரூட்ஸ் என பலவகை மரங்கள் , பூக்கள், தாமரை, அல்லி என மணம் வீசும் பூக்களையும் வளர்த்து வருகிறார் .இதுவே இயற்கை மீது இவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறது .
மரம் வளர்க்க சட்டம்:ஜவஹர் கூறுகையில்,""நான் பல விதமான மரக்கன்றுகளை வளர்க்கிறேன். யார் கேட்டா லும் இலவசமாக கொடுக்கிறேன். எனது கிராமம் மற்றும் அருப்புக்கோட்டை நகர், மரங்கள் அடர்ந்து செழிப்பாக வேண்டும் என்பது எனது குறிக்கோள். நான் இதை தனி மனிதனாக தான் செய்கிறேன். அதிக மரங்கள் வளர்த்து பராமரிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடையே மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் வளரும். மேலும் அரசு அலுவலர்கள் கட்டாயம் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 5 மரங்களையாவது நட்டு பராமரிக்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும்,''என்றார். இவரை பாராட்ட 93456 78949.
சர்க்கரை நோயை விரட்டும்
மாடி தோட்டம்
ரமேஷ் (அருப்புக்கோட்டை): மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் ஒரு மரம் வளர்க்க வேண்டும் . வீடுகள் மாடியில் தோட்டம் அமைத்து அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வளர்க்கலாம். மூலிகை செடிகளையும் வளர்க்கலாம். இயற்கை முறையில் வரும் காய்கறிகளை பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது. இது மனத்திற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
மாடி தோட்டத்தை 8 வடிவ முறையில், வடக்கு தெற்காக அமைத்து தினமும் அரை மணி நேரம் இதில் நடந்து வந்தால் சர்க்கரை வியாதி காணாமல் போகும், ரத்த அழுத்தமும் ஏற்படாது.


Source : Dinamalar

No comments:

Post a Comment