எள்ளில் உண்டாகும் பூச்சி நோய்களை பயிர் பாதுகாப்பு செய்து கட்டுப்படுத்தலாம் என மொடக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் குழந்தைவேலு கூறியதாவது: மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி பகுதியில் விவசாயிகள் பல ஹெக்டர் பரப்பளவில் எள் பயிரிட்டுள்ளனர். எள்ளுச் செடிகளில் தண்டு பிணைப்பான், காய் பிணைப்பான் குறிப்பிடத்தக்க பூச்சிகளாகும். அதிக தாக்குதல் இருந்தால் செடி காய்ந்து விடவும் வாய்ப்புண்டு. இதைக் கட்டுப்படுத்த, பூச்சி தாக்கிய குருத்துக்களை, காய் கொத்துக்களை சேகரித்து அழிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு மாலத்தியான் அல்லது பென்தியானை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். காவடிப்புழுக்கள் இலைகளை தின்று விட்டு நரம்புகளை மட்டுமே விட்டு வைத்திருக்கும். இதைக் கட்டுப்படுத்த புழுக்களை மொத்தமாக சேர்த்து அழிக்கவேண்டும். இவைகளுக்கும் பென்தியான் மருந்து தெளிக்கலாம். எள் செடியில் நத்தை பூச்சி நோய் மிகவும் மோசமானது. நத்தை பூச்சி, இலை நரம்புகளை மட்டும் விட்டு விட்டு பிற பாகங்களை கடித்து சேதப்படுத்தும். புழு நத்தையை போன்ற தட்டையான உடல் கொண்டது. இப்புழு உடல் மீது பட்டால் எரிச்சல் ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த பென்தியான் அல்லது மாலத்தியான் மருந்துகளை தெளித்தால் போதுமானது. பயிர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டால் எளிதில் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment